274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி போராட்டக்களமாகும் டெல்டா மாவட்டங்கள்: 8 வழிச்சாலை போராட்டம் போல வெடிக்கும் என விவசாயிகள் எச்சரிக்கை

சென்னை: டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து 8 வழிச்சாலை எதிர்ப்பு போராட்டத்தை போன்று மிக பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் டெல்டா மாவட்டங்களில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காவிரி படுகையில் இயற்கை எரிவாயு அதிக அளவில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக்ததில் விழுப்புரம், நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  முதலில் காவிரி படுகையில் சிறிய அளவில் ஹைட்ரோ கார்பன் மற்றும் கச்சா எண்ணெய் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக நெடுவாசலில் கடந்த 2006ம் ஆண்டு பூமிக்கடியில் சுமார் 6ஆயிரம் அடி துளையிடப்பட்டது. முதலில் இது குறித்து விவசாயிகளுக்கு சரியாக தெரியாததால் நெடுவாசலில் தவறுதலாக அனுமதி அளித்துவிட்டனர்.

பின்னர் இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. மேலும் துளை அமைக்கப்பட்ட அருகில் உள்ள நிலங்கள் உபரி நிலமாக மாறி வந்தது. வயல் வெளி முழுவதும் எண்ணையால் பயிர் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அடிக்கடி தீ விபத்துகளும் நடந்தன. அதைதொடர்ந்து விவசாயிகள் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு அடைந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி திட்டத்தை கைவிட வைத்தனர். இந்நிலையில் மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை வேதாந்தா நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு மத்திய பெட்ரோலிய அமைச்சத்துடன் இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி பெற்று உள்ளது. இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடம் எந்த வித கருத்தும் பெறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தை தொடங்க வேதாந்தா குழுமம் பல்வேறு பணிகளை தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விழுப்புரம், நாகை, புதுச்சேரி, கரைக்கால் பகுதிகளில் 274 இடங்களில் 3,500 அடி முதல் 6 ஆயிரம் அடி வரை கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை  1,794 சதுர கிலோ மீட்டர் கிணறுகள் தோண்டப்பட உள்ளனர். அதில் 1,654 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வங்கக்கடலில் அமைக்கப்படுகிறது. கடற் பகுதியில் கிணறுகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீரின் தன்மை மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றியுள்ள நிலங்களின் தன்மைகள் உப்பளங்களாக மாறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையாக தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, டெல்டா மாவட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 274 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திட்டம் அறிவிக்கப்பட்ட உடனே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அதோடு, காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கத்தினர்களும் போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவரியை பாலைவனமாக மாற்றியதோடு, தற்போது அந்த பகுதியை அழிக்கவும் மத்திய அரசு திட்டமிடுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காவிரியை காக்க விரைவில் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில், 8 வழி சாலை திட்டத்தை கண்டித்து சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் தன்னெழுச்சியாக காலவரையற்ற உண்ணாவிரதம், தொடர் போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். அதை போன்று மிக பெரிய அளவில் டெல்டா பகுதி மற்றும் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு ெசய்துள்ளனர். அதன்கான பணிகளில் மக்கள் தன்னெழுச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும். திட்டத்தை செயல்படுத்த விவசாய நிலங்களில் யாரேனும் ஆய்வு செய்ய வருகிறார்களா என்பது குறித்து இரவு பகலாக பொதுமக்கள் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். 8 வழி சாலை திட்டத்தை போன்று எங்கள் உயிரை கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக்ததில் இருந்து முழுமையாக ரத்து ெசய்வோம் என்று மத்திய மற்றும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: