அடிப்படை வசதிகள் இல்லாத தொடக்கப்பள்ளி

*  விடுமுறையில் சீரமைக்கப்படுமா?

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ரம்ஜான் தைக்கால். இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் ஓட்டு கட்டிடத்தில் அரசு துவக்கப்பள்ளி இயங்கிவந்தது. அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையின் காரணமாக, தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை 2006- 2007ம் கல்வியாண்டில் அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பள்ளி கட்டிடம் கட்டியது.

சுமார் 12 வருடமாக சுற்றுச்சுவர் இல்லாமலேயே இயங்கி வருகிறது. மேலும் சாலையும் பழுதடைந்து, நடந்து செல்லக்கூட லாயக்கற்று காணப்படுகிறது, குறிப்பாக புதர்கள் நிறைந்து இருப்பதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கிறது. இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தினுள் சிலர் அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் மது பாராக மாறிவிட்டது. பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர். பிளாஸ்டிக் குப்பையும் அதிகளவில் உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் சாலை குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

தண்ணீர் தொட்டியும் பழுதடைந்து இருப்பதால், குடிநீர் சுகாதாரமாக இல்லை. பள்ளி நடைபெறும் காலத்தில் மாணவர்கள் குடிநீருக்கும், கழிவறைக்கும் இந்த மாசடைந்த தண்ணீரையே பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கிராம பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வரும் ஜூன் மாதம் 3ம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளிக்கு சாலை வசதி, சுற்றுச்சுவர், தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, பள்ளி சாலையில் தெருவிளக்கு ஆகியவைகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: