வடகொரியா ஏவுகணை சோதனை நம்பிக்கை துரோகம் அல்ல: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

வாஷிங்டன்: ‘‘வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளை நம்பிக்கை துரோகம் என கூற மாட்டேன்,’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி  வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா  பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனிடையே, திடீரென பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் முன் வந்தார். கடந்தாண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் முதல் முறையாகவும் பின்னர்  கடந்த பிப்ரவரியில் வியட்நாமில் 2வது முறையாகவும் அவர் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நல்லிணக்கத்தின் அடிப்படையில், வடகொரியா அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை  தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. இதனிடையே, வடகொரியா கடந்த வாரம் சனிக்கிழமை அந்நாட்டின் கிழக்கு கடற்கரையில் இருந்து பல ஏவுகணை சோதனைகளை நடத்தியது. 2வது முறையாக கடந்த வியாழக்கிழமை  மீண்டும்  ஏவுகணை சோதனை நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறுகையில், ``வட கொரியா அண்மையில் ஏவுகணை சோதனைகள் நடத்தியதை நம்பிக்கை துரோகம் என்று கூற மாட்டேன். முதலில் நானும்  அப்படிதான் நினைத்திருந்தேன். தற்போது அதனை நம்பிக்கை துரோகம் என்று சொல்வதற்கில்லை. இவை குறுகிய தூரம் தாக்கும் ஏவுகணையின் தரநிலை சோதனை. எனக்கும் கிம்முக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. இது போன்ற தொடர் சோதனைகள், எதிர்காலத்தில் அவர் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்யலாம். ஆனால், தற்போது அப்படி எதுவும் கிடையாது,’’  என்றார்.

சோதனைகள் வேண்டாம் 70 நாடுகள் வலியுறுத்தல்

கடந்த வாரம் வடகொரியா இருமுறை குறுகிய தூர ஏவுகணைகளை சோதனை செய்ததற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக 70 உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  `வடகொரியாவின் ஏவுகணை சோதனை பிராந்திய, உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அணு ஆயுதம், ஏவுகணை மற்றும் அது தொடர்பான சோதனை திட்டங்களை வடகொரியா  கைவிட வேண்டும். அச்சுறுத்தல் விடுக்கும் எந்த செயலையும் அந்நாடு தவிர்ப்பது நல்லது. அணு ஆயுத ஒழிப்பு குறித்து வடகொரியா மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.பிரான்ஸ் தயாரித்த இதன் வரைவு அறிக்கையில் அமெரிக்கா, தென் கொரியா, ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அதே நேரம், வடகொரியாவை ஆதரிக்கும் சீனாவும்,  ரஷ்யாவும் இதில் கையெழுத்திடவில்லை.

Related Stories: