சொட்டுத் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

* பருவமழைக்கு முன் பராமரிக்க கோரிக்கை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்மாய்களை பருவமழைக்கு முன் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி, பிப்.மாதங்களில் 42.8 மி.மீ., கோடை காலத்தில் மார்ச் முதல் மே வரை 161.5 மி.மீ. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்.வரை 196.8 மி.மீ., வடகிழக்குப் பருவமழை காலமான அக்.முதல் டிச. வரை 419 மி.மீ என மொத்தம் ஆண்டு சராசரியாக 820.1 மி.மீ மழை பெய்ய வேண்டும்.

கடந்த 2001 முதல் 2018 வரையிலான காலத்தில் 2005, 2006, 2015 ஆண்டுகளில் மட்டும் சராசரி மழையளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த 2018ல் 801.93 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பாண்டில் ஜன.தொடங்கி ஏப். வரை பெய்ய வேண்டிய மழையளவான 139.1 மி.மீ. ஆனால் மே.4 வரையிலான கால கட்டத்தில் 79.86 மி.மீ மழை பதிவாகி உள்ளது. சராசரியை விட சுமார் 60 மி. மீ மழை குறைவாக பெய்துள்ளது

.இந்நிலையில், மாவட்டத்தில் 1020 கண்மாய்களும் சொட்டு தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. கோடை மழை பொய்த்து விடுமோ என விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வறண்டு கிடக்கும் கண்மாய்களில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், கண்மாய் கரைகளில் உள்ள மரங்களை அகற்றுதல், மடை, கழுங்கு மராமத்து உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும்.

தென்மேற்கு பருவமழை துவங்கும் ஜூன் மாதத்திற்குள் கண்மாய்களை பராமரிப்பு செய்யவும், மழைநீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களில் தண்ணீர் தேங்கினால மட்டுமே நிலத்தடி நீர் உயரும். இதனால், குடிநீர் தேவைகளை சமாளிக்க முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் சமூக அமைப்புகள், நிறுவனங்கள் மூலம் கண்மாய்களை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: