சூலூரில் பறக்கும்படை சோதனையில் வாக்கிடாக்கிகள் பறிமுதல்

சூலூர்: சூலூரில் பறக்கும்படையின் நடத்திய சோதனையில் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தால் 9 பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு சூலூர் உதவி ஆய்வாளர் குமரேசன் மற்றும் போலீசாருடன் கணியூர் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி, டாக்கிகள் 15 இருந்தது.

காரில் வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விவேக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வாக்கி டாக்கிக்கான ஆவணத்தை கேட்டபோது, காரில் எந்தவித ஆவணங்களும் இல்லை. இதைத்தொடர்ந்து 15 வாக்கி டாக்கிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், சூலூர் தேர்தல் நடத்தும் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். இந்த வாக்கிடாக்கிகள் கேரள போலீசார் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: