பெண்ணையாற்றுக்கு உரிமை கோருவதா? கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: தமிழகத்தையும் அடிப்படையாக கொண்டு பெண்ணையாறு ஓடுவதால் கர்நாடகா மாநிலம் அதற்கென தனி உரிமைக்கோர முடியாது  என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின், குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆற்றின் கிளை நதியாக பெண்ணையாறு உள்ளது. இதில் ஹாசன், மைசூரு,  மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக பயணித்து, தமிழகத்தை வந்தடைகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றின் கிளையான  பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

 அதில்,”கர்நாடக மாநிலத்தின் பங்கரபேட்டை தாலுகா, யார்கோல் கிரமத்து பகுதியில் புதிய தடுப்பணையை கர்நாடக அரசு கட்டுவதை நீதிமன்றம்  தடுத்து நிறுத்த வேண்டும். அதேப்போல் பெண்ணையாற்று பகுதியில், தடுப்பணை உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செய்வதற்கு முன் தமிழக  அரசின் ஒப்புதலை கண்டிப்பாக கர்நாடக அரசு பெற நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பாலாறு- பெண்ணையாறு ஆகியவற்றை இணைக்க மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்ததபோது, பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும்  விவகாரத்தில் கர்நாடக அரசு ஆறு வாரத்தில் பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதற்கு தமிழக அரசு அடுத்த 4 வாரத்தில்  அதற்கான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஜனவரி 7ம் தேதி உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் தமிழக அரசு தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  அதில்,”பெண்ணையாற்றை பொருத்தவரையில் தமிழகத்தையும் அடிப்படையாக கொண்டு ஓடுவதால் அதற்கு கர்நாடகா அரசு உரிமைக்கோர  முடியாது. மேலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தவித கட்டுமான பணிகளையும் செய்யக்கூடாது. மேலும் மார்கண்டேய கிளை நதியில்  இருந்து கர்நாடகாவிற்கு நீர் திறப்பதை நீதிமன்றம் தடுக்க வேண்டும்.

 மேலும் பெண்ணையாற்றின் குறுக்கே படுகை அணை கட்ட தமிழக அரசிடம் கேட்காமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை  ரத்து செய்ய வேண்டும். ஏனெனில் குடிநீருக்கு என கூறிவிட்டு மொத்த நீரோட்டத்தையும் திசை மாற்றி கர்நாடகா அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து  கொள்கின்றனர். இதனால் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்படைகின்றனர். இதைத்தவிர குறிப்பாக மழைக்காலத்தில் ஆற்றில் கழிவு நீரை கர்நாடகா அரசு கலந்து விடுவதால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: