குப்பை, கழிவுநீர் கலப்பதால் நகராட்சி குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

பல்லாவரம்: அனகாபுத்தூர் நகராட்சி குளத்தில் குப்பை கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அனகாபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில், நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் பூங்கா அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் இந்த பூங்காவில் நடைபயிற்சி, யோகாசனம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பூங்கா அருகே குளம் ஒன்று அமைந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் இதனை முறையாக தூர்வாரி பராமரிக்காததால், தூர்ந்து காணப்படுகிறது. மேலும், இந்த குளத்தின் அருகே நகராட்சி குப்பை கிடங்கு உள்ளதால், அங்கிருந்து காற்றில் குப்பை பறந்து குளத்தில் விழுகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் விடப்படுவதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது.

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அனகாபுத்தூர் பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. இதனால், தூர்ந்து மழைக்காலங்களில் சேமிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது, கோடை காலம் என்பதால், குளம் வறண்டு குறைந்தளவு நீர் மட்டும் உள்ளது. இதனால், சுற்றுப் பகுதி வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து திண்டாடி வருகிறோம். இந்நிலையில், குளத்தில் கழிவுநீர் விடப்படுவதாலும், குப்பை விழுவதாலும் நீர் மாசடைந்து குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இந்த குளத்தை தூர்வாரி, முறையாக பராமரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: