இளம்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் எம்.பி.சசிகலா புஷ்பாவை விடுவிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி,மே.8: இளம் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து எம்பி.சசிகலா புஷ்பாவை விடுவிக்க  முடியாது என உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டதாக  நீக்கப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. அவர் மற்றும் அவரின் முதல் கணவர்  லிங்கேஸ்வர திலகன், மற்றும் மகன் ஆகியோர் மீது தூத்துக்குடியை சேர்ந்த  இளம்பெண்கள் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்தனர்.  இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்பி.சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும்  வழக்கின் வக்காலத்தில் போடப்பட்ட கையெழுத்து போலி ; அதனால் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதில்  முதலாவதாக விசாரித்த நீதிமன்றம் அவரை கைது செய்ய மட்டும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை பல்வேறு  கட்டங்களாக விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2ம் தேதி அனைத்துக்கட்ட விசாரணைகளும் வழக்கில்  முடிந்து விட்டதாக கூறி தீர்ப்பை மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

நீதிபதிகள் பானுமதி மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட வழக்கில் நேற்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில்,”  பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் இருந்து சசிகலா புஷ்பாவை விடுவிக்க முடியாது. இருப்பினும் போலி கையெழுத்து தொடர்பான  எப்.ஐ.ஆரை நீதிமன்றம் ரத்து செய்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் சுகந்தியை தாக்கிய விவகாரம் தொடர்பாக நிலுவையில்  இருக்கும் வழக்கை அவர் சந்தித்தே ஆக வேண்டும். அதில் எந்தவித தளர்வும் கொடுக்க முடியாது. இதில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக  உயர்நீதிமன்றத்தில் உள்ள பிரதான வழக்கின் விசாரணை முடியும் வரை எம்பி.சசிகலா புஷ்பாவை கைது செய்ய நீதிமன்றம் தடை விதிக்கிறது என  தீர்ப்பு வழங்கி நேற்று உத்தவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: