படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் களைகட்டிய திற்பரப்பு அருவி

குலசேகரம்: குமரியில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு அடுத்ததாக அதிக பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத நதியான கோதையாறு இங்கு அருவியாக விழுவதால் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டி வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நீர்நிலைகள் கடும் வறட்சியை சந்தித்தது.  இதனால் திற்பரப்பு அருவியில் 2 மாதம் தண்ணீர் இன்றி காணப்பட்டது. கோடை மழை காரணமாக கடந்த சில வாரங்களாக கோதையாறுக்கு வருகின்ற தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு  தண்ணீர் கொட்டுகிறது. ஆகவே திற்பரப்பு அருவிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது பொது மக்கள் கூட்டத்தால் களைகட்டி உள்ளது.

இந்த பகுதியில் மரங்கள் அடர்ந்து ேசாலைவனம் போல் இருப்பதால் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது. அதே வேளையில் தண்ணீரும் குளிர்ச்சியாக விழுகிறது. ஆகவே சுட்டெரிக்கும் வெயிலில் வரும் பயணிகளுக்கு இந்த இடம்  புத்துணர்வை தருகிறது. இதேபோல் அருவியின் மேல் உள்ள தடுப்பணையில் நடக்கும் உல்லாச படகு சவாரியிலும் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று இயற்கை எழிலை ரசிக்கின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் வருவதால் திற்பரப்பு பகுதி  போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகிறது.

இதேேபால் ஆசியாவில் உயரமான மாத்தூர் தொட்டி பாலத்திலும் கோடை விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் களை கட்டியுள்ளது. சுற்றுலா வருகிறவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 2 மலை குன்றுகளை இணைத்துள்ள  தொட்டி பாலத்தின் நடுப்பகுதிக்கு செல்கின்றனர்.

 பின்னர் பாறைகளுக்கு நடுவில் செல்லும் பரளியாற்றின் அழகை ரசிப்பதோடு செல்வி எடுத்தும் மகிழ்கின்றனர். பாலத்தை சுற்றிலும் ஏராளமான நடைபாதை, கடைகள் முளைத்துள்ளன. இந்த கடைகளில் விற்பனையாகும் இளநீர், அன்னாசி,  பலா பழம், தேன், சிகப்பு வாழைக்கன்று ேபான்றவற்றை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பயணிகளின் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளும் குறைவாகவே உள்ளன. குறிப்பாக வாகன நிறுத்தும் வசதி இல்லாதது ஒரு பெரும் குறையாகவே உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்கின்றன. இதேபோல் பேச்சிப்பாறை, சூழியியல் சுற்றுலாத்தலமான  கோதையாறு போன்ற பகுதிகளுக்கும் தற்போது உள்ளூர், வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

புறக்காவல் நிலையத்துக்கு பூட்டு:

திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் போதை ஆசாமிகள் எல்லை மீறுவது, பிக்பாக்கெட், வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து திருடுவது, சில்மிஷம் ேபான்ற செயல்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இந்த பகுதி  குலசேகரம், திருவட்டார், அருமனை ஆகிய காவல் நிலையங்களின் எல்லைகளை சந்திக்கும் இடத்தில் இருப்பதால் பாதிக்கப்படும் சுற்றுலா பயணிகள் புகார் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அலைகழிக்கப்பட்டு வந்தனர்.  இதையடுத்து பயணிகளின் வசதிக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. சில நாட்கள் போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது. அதன் பிறகு விடுமுறை நாட்களில் மட்டும்  காவலர்கள் நியமிக்கப்பட்டனர். கோடைவிடுமுறை கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்போது, இங்கு நியமிக்கப்பட்டிருந்த காவலர் ஒருவர் மாமூல் கேட்டு மிரட்டியது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அந்த காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் புறக்காவல் நிலையத்துக்கு காவலர் நியமிக்கப்பட வில்லை. தொடர்ந்து புறக்காவல் நிலையம் பூட்டி கிடக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில்  வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி போதை ஆசாமிகள் எல்லை மீறும் சம்பவங்கள், திருட்டு, பிக்பாக்கெட் அடிப்பது, சில்மிஷம் போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதுபோன்ற  சூழ்நிலையில் இங்கு போலீசார் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு ேபாதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு சென்று தன்னுடன் வந்த 2 பெண்களை காணவில்லை அவர்களை நான் தேட வேண்டும் என கூறி கூட்டத்துக்குள் நுழைய முயன்றார்.  அப்போது பேரூராட்சியால் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தவர்கள் அவரை தடுத்தனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் அவர் சிறுவர் நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கும் இடத்தில் தானும் குளிக்க வேண்டும் என அடம்பிடித்தார். அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே கோடை விடுமுறை முடியும்  வரை இங்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: