கடும் வறட்சி நிலவுவதால் இலைகள் உதிர்ந்து மொட்டையாக நிற்கும் மரங்கள்: கால்நடைகள் கடும் பாதிப்பு

திருமயம்: அரிமளம், திருமயம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் இலைகள் உதிர்த்து மரங்கள் மொட்டையாக நிற்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம், திருமயம் பகுதிகள் அதிகளவு வன, விவசாய நிலங்களை கொண்டவைகளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் விவசாயத்துடன் ஆடு, மாடுகள் வளர்ப்பதில் அதிகம் ஆர்வம்காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மழையின் அளவு குறைந்து வெயிலின் தாக்கம் அரிமளம், திருமயம் பகுதியில் அதிகம் இருப்பதால் வசந்த காலத்தில் கூட நீர் நிலைகள் வறண்டு நீறின்றி காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள அனைத்து கண்மாய், ஊரணி, ஆறுகள் நீரின்றி வறண்டு போயின. இதனால் கால்நடைகள் குடிக்க கூட நீரின்றி பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து பூமி வறண்டு போனதால் மரங்கள், புதர் செடிகள் இலைகளை உதிர்த்து இலைகளின்றி மொட்டையாக பாலைவன மரம்போல் காட்சியளிக்கிறது. இதனால் கோடைவெயிலினால் காற்று சூடாகிவளிமண்டலம் அதிக வெப்பத்துடன் அனல் காற்று வீசுகிறது. மரங்களும் இழைகளின்றி உள்ளதால் கால்நடைகள் நிழல் இல்லாமலும் மேய்ச்சலுக்கு மரங்கள், சிறுதாவரங்கள், புதர் செடிகள், புற்கள் கருகிய நிலையில் குடிக்க கூட நீரில்லாமல் மெலிந்து இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடுகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலும் அரிமளம் பகுதியில் கால்நடைகள் அரிமளம் தைலமர காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்வதால் காட்டுப்பகுதியில் நீர் தொட்டிகள் அமைத்து நீர் நிரப்புவதன் மூலம் கால்நடைகள் தாகம் தீர்ப்பதுடன் காட்டுக்குள் உள்ள வன விலங்குகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் வன விலங்குகள் தண்ணீருக்காக ஊருக்குள் வந்து விபத்தில் சிக்குவது, நாய்களுக்கு இரையாவது தடுக்கப்படும் என்றனர். எனவே அரிமளம், திருமயம் வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மாவட்ட நிர்வாகம் வன விலங்குகள், கால்நடைகளை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: