கோடை வெயில் கொளுத்துவதால் கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: அக்னி வெயில் மற்றும் கோடை சீசனை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். ‘மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. கோடை மற்றும் வார விடுமுறை, அக்னி வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நேற்று கொடைக்கானலில் குவிந்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் கூட்டம் அதிகளவு இருந்தது. முக்கிய சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூண் பாறை, கிரீன் வேலி வியூ பகுதிகளில் மேக மூட்டம் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள், நீண்ட நேரம் கொடைக்கானலின் ரம்மிய அழகை கண்டு ரசித்தனர்.

குணா குகை, பைன் பாரஸ்ட் பகுதிகளிலும் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருந்தது. மாலை, இரவு நேரங்களில் இதமான சூழல் நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட சூழலை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்தனர். நேற்று மாலை கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். அக்னி வெயில் கொளுத்தி எடுப்பதால் வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலாத்தல வியாபாரிகள், வாடகை வாகனங்களின் டிரைவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: