ரபேல் முறைகேடு விவகாரம் மத்திய அரசு புதிய பிரமாண பத்திரம் தாக்கல் : உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

புதுடெல்லி:  ரபேல் முறைகேடு தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வரும் நிலையில், மத்திய அரசு புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல்  செய்துள்ளது.இந்திய விமானப் படைக்கு  ரபேல் போர் விமானம் வாங்கும்  ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட  அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒப்பந்தத்தில் எந்த  முறைகேடும் நடக்கவில்லை’ என கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி தீர்ப்பு  வழங்கியது. இதை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  அதில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து  எடுக்கப்பட்ட புதிய முக்கிய ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. திருடி  சேர்க்கப்பட்ட இந்த ஆவணங்களை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என மத்திய  அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை  விசாரிக்கப் போவதாக அறிவித்தது.

இந்த வழக்கு கடந்த மாதம் 30ம் தேதி  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல்  செய்வதற்கு கூடுதலாக 4 வாரம் அவகாசம் வழங்கும்படி மத்திய அரசு  கேட்டது.  இதை நிராகரித்த நீதிபதிகள், மே 6ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல்  செய்யும்படி உத்தரவிட்டு, அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.  அதன்படி, இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில்,  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல்  செய்தது. அதில், ‘மத்திய தணிக்கைத் துறை அளித்துள்ள விளக்கத்தின் மூலம்,  ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.  முறைகேடு நடக்கவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், திருடப்பட்ட  ஆவணங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை  விசாரிக்க வேண்டிய அவசியம் கிடையாது. முந்தைய ரபேல் ஒப்பந்தத்தை விட  தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் 2.86 சதவீதம் விலை குறைவாக உள்ளது.  எனவே, மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என  கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: