சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம்: அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டு பாகிஸ்தான் அரசு அதிரடி!

இஸ்லாமாபாத்: சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தீவிரவாத தாக்குதலில் 41 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு சீனா தொழில்நுட்ப ரீதியாக சில கேள்விகளை எழுப்பி தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தது.

ஏற்கனவே, மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐநாவில் இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் 4 முறை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இதுதொடர்பாக சீனாவிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என சீன வெளியுறவுத்துறை நம்பிக்கை தெரிவித்தது. அதன்படி சீனா விதித்து வந்த மறுப்பை நீக்கிக்கொண்டதால் மசூத் அசார் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் பயணத் தடைக்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நேற்றிரவு பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா தீர்மானத்தை முழுமையாக அமல்படுத்தும் வகையில் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மசூத் அசார் மீதான தடைகளை அமல்படுத்தவும், சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ஆயுதங்கள், வெடிமருந்து வாங்கவோ, விற்கவோ அசாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. மசூத் அசார் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக அமல்படுத்தப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை நேற்று தெரிவித்திருந்த நிலையில், நேற்றிரவே இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: