அப்பர் பவானியில் சூழல் சுற்றுலா

ஊட்டி :   நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி அணை மற்றும் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை வனத்துறை அழைத்து செல்வது போல், அப்பர்பவானிக்கும் அழைத்து செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, சிறுவர் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, மரவியல் பூங்கா, தொட்டபெட்டா மற்றும் கோடநாடு காட்சி முனை, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ், பைக்காரா நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களை கடந்த பல ஆண்டாக பார்த்துவிட்டு திரும்பும் சுற்றுலா பயணிகள் புதிதாக ஏதேனும் ஒரு சுற்றுலா தலத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 அதே சமயம் அந்த சுற்றுலா தலம் இயற்கை சார்ந்த அல்லது வன விலங்குகள் பார்க்க கூடிய சுற்றுலா தலமாக இருத்தல் வேண்டும் என விரும்புகின்றனர். குறிப்பாக முதுமலை, அப்பர்பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல பல ஆண்டாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. காப்பகத்தின் வாகனங்கள் மூலம் வனப்பகுதிகளுக்குள் அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள வன விலங்குகள் காண்பிக்கப்படுகிறது. யானை சவாரி ஆகியவை உள்ளன. இதனால் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

 வி.ஐ.பி.,க்கள் மட்டுமே சென்று வந்துக் கொண்டிருக்கும் அவாலஞ்சி மற்றும் அப்பர்பவானி போன்ற பகுதிகளையும் காண சுற்றுலா பயணிகள் விருப்பம் தெரிவித்து வந்தனர். ஆனால், வனத்துறை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்திருந்தது. எனினும், தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு கட்டுபாடுகளுடன் அவலாஞ்சி வனத்திற்குள் செல்ல வனத்துறை அனுமதித்தது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அவலாஞ்சி மற்றும் லக்கிடி டாப் போன்ற வனங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது அங்கு செல்கின்றனர். பலர் ஊட்டியில் உள்ள பூங்காக்களை பார்க்காமல் இது போன்ற பகுதிகளை காண ஆர்வம் காட்டி வருகின்றனர். அவலாஞ்சியை அடுத்துள்ள அப்பர்பவானி பகுதியில் அழகிய புல்வெளிகள், மடிப்பு மலைகள், நீண்ட தூரம் செல்லும் அப்பர்பவானி அணை, கேரள மாநில எல்லையில் உள்ள வனங்கள், சிறிய நீரோடைகள் மற்றும் எங்கு பார்த்தாலும் பச்சை நிற கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கும் புல் மலைகள் ஆகியவை உள்ளன. இங்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.

  ஆனால், வனத்துறை சுற்றுலா பயணிகள் செல்ல இங்கு அனுமதிப்பதில்லை. இந்நிலையில் வனத்துறையினருக்கு தெரியாமல் சிலர் சென்று வந்தனர். ஆனால், தற்போது அதற்கும் வனத்துறை தடை விதித்துள்ளது. கோரகுந்தா எஸ்டேட்டிற்கு முன்னரே சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அப்பர்பவானி வனத்திற்குள் செல்ல வனத்துறை அல்லது குந்தா மின் வாரியத்திடம் அனுமதி பெற்றால் மட்டுமே செல்ல முடியும். தற்போது வனத்துறையினர் மற்றும் மின் வாரியத்தினர் மட்டுமே செல்ல முடிகிறது. அப்பர்பவானி செல்பவர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டது.

 சுற்றுலா பயணிகளை நம்பி மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் வியாபாரம் செய்து வந்தனர். தற்போது அவர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, வனத்துறையினர் அவலாஞ்சி பகுதியில் சூழல் சுற்றுலாவை அறிமுகம் செய்து, சுற்றுலா பயணிகளை வாகனங்கள் மூலம் அழைத்து செல்கிறது. அதேபோல், அப்பர்பவானியிலும் சூழல் சுற்றுலாவை அறிமுகம் செய்யலாம். கோரகுந்தாவில் இருந்து பங்கிதபால் வரை சுற்றுலா பயணிகளை தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லலாம்.

இதன் மூலம் சுற்றுலா பயணிகள் இயற்கை நிறைந்த அப்பர்பவானி அணை, மடிப்பு மலைகள், புல்வெளிகள், நீரோடைகள் என பல்வேறு இயற்கை அழகை காண வாய்ப்புள்ளது. அதே சமயம், வனத்துறையினர் மற்றும் மஞ்சூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்பர்பவானி பகுதியில் சூழல் ஏற்படுத்த நீலகிரி வனக்கோட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மட்டுமின்றி மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: