கேரளாவில் ஆம்னி பஸ்களில் சரக்குகள் கொண்டு செல்ல திடீர் தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆம்னி பஸ்களில் சரக்குகள் கொண்டு செல்ல அரசு திடீர் தடை விதித்துள்ளது. கேரளாவில் விதிமுறைகளை மீறி ஓடும் ஆம்னி பஸ்களுக்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து ஆம்னி பஸ்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தவேண்டும் என்று கேரள போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கேரள போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஜோதிலால் ஆம்னி பஸ்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ் நிலையத்தின் 500 மீ. சுற்றளவில் ஆம்னி பஸ்களை நிறுத்தவோ, புக்கிங் அலுவலகம் அமைக்கவோ கூடாது.

புக்கிங் அலுவலகம் நடத்த விண்ணப்பிப்பவர்களுக்கு எந்த குற்ற பின்னணியும் இருக்க கூடாது. போலீசிடமிருந்து தடையில்லா சான்று பெறவேண்டும். பயணிகளின் உடமைகள் தவிர வேறு எந்த சரக்குகளையும் பஸ்சில் ஏற்றக்கூடாது. மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 93ன் படி ஒப்பந்த வாகன பெர்மிட் உள்ள பஸ்களில் பயணிகளை கொண்டு செல்லவோ, டிக்கெட் கொடுக்கவோ அனுமதி கிடையாது. சரக்குகளும் கொண்டு செல்லக்கூடாது. ஆனால் இதில் கடும் விதிமீறல் நடைபெறுகிறது.

புக்கிங் அலுவலகங்கள் 150 சதுர அடி இருக்க வேண்டும். 10 பயணிகள் அமரும் வகையில் இடவசதி, கழிப்பறை, லாக்கர் அறை வேண்டும்.

அலுவலகத்தில் 6 மாத காட்சிகளை பதிவு செய்து வைக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். பஸ்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் இடங்களில் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்ய வேண்டும்.

மற்ற வாகன போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது. புக்கிங் அலுவலகத்தில் போலீஸ், போக்குவரத்து துறை அலுவலகங்களின் தொலைபேசி எண்கள், ஏஜெண்டின் லைசன்ஸ் ஆகியவற்றை பயணிகளின் பார்வைக்கு வைத்திருக்க வேண்டும். பயணிகளின் பெயர், விவரங்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் கேட்கும்போது அந்த விவரங்களை ஒப்படைக்க வேண்டும் வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: