புது அரசு... புது பிரதமர் கலக்கப் போகுதாம்: அகிலேஷ் கூட்டணி

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து, மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. கான்பூரில் நேற்று நடந்த சமாஜ்வாடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் அகிலேஷ் கலந்து கொண்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி: மதவாத சக்தி ஆட்சி அமைப்பதை தடுக்கவே எங்களுடைய கூட்டணி உருவாக்கப்பட்டது. தேசத்தின் நலன் கருதியே நாங்கள் இதை செய்துள்ளோம்.  ஆனால், மத்தியில் பாஜ மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுப்பதை விட, அடுத்த  சட்டப்பேரவை தேர்தலில் உபி.யில் ஆட்சியை பிடிப்பதிலேயே காங்கிரஸ் குறிக்கோளாக உள்ளது.

நாடு முழுவதும் 38 இதர கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் பாஜ.வுக்கு, எங்கள் கூட்டணியை `கலப்பட கூட்டணி’ என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. தேர்தல் முடிவுக்கு பிறகு எங்கள் கூட்டணி உடையுமா? காணாமல் போகுமா? என்பது பற்றி அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? மக்களின் முக்கிய பிரச்னைகளை எடுத்து கூறி நாங்கள் வாக்கு சேகரிக்கிறோம். ஆனால், மக்களை முட்டாளாக்கி ஓட்டுகளை வாங்க பார்க்கிறார் மோடி.

முதல்வர் யோகியின் பிரசார உரையை நன்கு கவனித்தால், பசுமை வைரஸ், ராகுல், மாமாஜி, அலி, கோல்கேட், பஜ்ரங்பாலி குறித்து மட்டுமே பேசியது தெரியும். ஏனென்றால், உபி.யில் சொல்லி கொள்ளும்படி அவர் ஒன்றுமே செய்யவில்லை. தேர்தல் முடிந்ததும் மக்கள் அவரை மீண்டும் ஆசிரமத்துக்கே அனுப்பி விடுவார்கள். நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. பாஜ.வை போல் எங்களிடம் ஒரேயொரு தலைவர் மட்டுமே இல்லை; பல தலைவர்கள் உள்ளனர். தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டுக்கு புதிய அரசையும், புதிய பிரதமரையும் எங்கள் கூட்டணி வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: