ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் தீ; அதிகாரி பலி; 7 பேர் காயம்

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, கடற்படை கமாண்டர் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்திய கடற்படையில் உள்ள மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா. வட கர்நாடக மாவட்டம், கார்வார் துறைமுகத்துக்குள் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கப்பலில் இருந்த பாய்லரில் மின்கசிவு ஏற்பட்டது. இதில், திடீர் என்று தீப்பிடித்து பரவியது.

கப்பலில் இருந்த வீரர்கள் தீயை அணைத்ததால், கப்பல் பெரிய சேதமின்றி தப்பியது. இந்நிலையில், தீயை அணைக்க போராடிய கப்பல் படை அதிகாரி சவுகான் திடீரென சுய நினைவு இழந்தார். தீயால் ஏற்பட்ட புகை காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கார்வாரில் உள்ள கப்பல்படை மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சவுகான் பரிதாபமாக பலியானார்.

மேலும், தீ விபத்தில் கப்பல் ஊழியர்கள் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விமானந்தாங்கி கப்பல் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டு, கடந்த 2013ம் ஆண்டில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதில், ஒரே நேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும். இது, 44 ஆயிரத்து 500 டன் எடை கொண்டது. 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் உயரமும் கொண்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: