ராசிபுரத்தில் செவிலியர் அமுதா குழந்தைகளை விற்பனை செய்த விவகாரம் : ஆம்புலன்ஸ் ஓட்டுநர், செவிலியர் கைது

நாமக்கல் : ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலியர் பர்வின் கைது செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா பேசிய ஆடியோ வெளியானது. இதுகுறித்து அமுதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் குழந்தைகளை கடத்தி வந்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அமுதா மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் நாமக்கல் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் தகவல்களை ஆய்வு செய்ய ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. மேலும் குழந்தைகளை விற்பனை செய்த ஊர்களுக்கு ஓய்வு பெற்ற செவிலியர் அமுதாவை அழைத்து சென்று ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொல்லி மலையை சார்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், தனியார் செவிலியர் பர்வீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அமுதாவிற்கு உதவியது தெரியவந்துள்ளது.

முருகேசனிடம் நடத்திய விசாரணையில் கொல்லிமலை பகுதியில் இருந்து 4 குழந்தைகளை பெற்று அமுதாவிடம் விற்பனை செய்துள்ளதாகவும், அதே போல 8 குழந்தைகளை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளில் ராசிபுரம் நகராட்சியில் வழங்கப்பட்டுள்ள சுமார் 4500 பிறப்பு சான்றிதழ்களையும், கொல்லிமலையில் வழங்கப்பட்டுள்ள சுமார் 1000 பிறப்பு சான்றிதழிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி கொல்லிமலை வாழவந்திநாட்டில் ஒரு பெண் குழந்தையை வாங்கி விற்றதாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமுதாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணம் வரவு வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அமுதாவின் வங்கி கணக்கு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: