21 கையெறி குண்டுகள் சிக்கின இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு : ராணுவம், அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பு

கொழும்பு: இலங்கையில் தலைநகர் கொழும்பு அருகே நேற்றும் குண்டுவெடித்ததால் பதற்றம் அதிகரித்தது. நீதிமன்ற வளாகத்தின் அருகே குண்டுவெடித்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாடு முழுவதும் ராணுவமும், அதிரடிப் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், முட்வால் பகுதியில் 21 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில், ஈஸ்டர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்பட 360 பேர் பலியாயினர். 36 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில், உள்நாட்டைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அரசு கூறி வருகிறது.

தீவிரவாத சதித் திட்டத்திற்கு உதவியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவமும், போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தீவிரவாத பயிற்சி பெற்ற பலர் கொழும்பில் ஊடுருவி இருப்பதாகவும், மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதற்கேற்ப, தலைநகர் கொழும்பில் கடந்த 3 நாட்களாக ஏதேனும் ஒரு இடத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படுவதோ அல்லது வெடிப்பதோ தொடர்கதையாக உள்ளது. 4வது நாளாக நேற்றும் பதற்றம் தணியவில்லை. கொழும்பில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள புகோடா பகுதியில் மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் காலி இடத்தில் நேற்று காலை வெடிகுண்டு ஒன்று வெடித்தது. அந்த சமயத்தில் அப்பகுதியில் யாருமில்லாததால் எந்த சேதமும் ஏற்படவில்லை. அதேபோல், கொழும்பின் முட்வால் பகுதியில் சிஐடி மற்றும் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையில்  சந்தேகத்திற்கு இடமான வகையில் 6 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 21 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.

குண்டுவெடிப்பை தொடர்ந்து இதுவரை 75 பேர் வரை கைதாகி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. நிலைமை இன்னும் சீராகாததால், மத வழிபாடுகளை தவிர்க்க வேண்டுமென போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து சூபி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக கிடைத்துள்ள தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இன்றைய வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பதற்றம் தணியும் வரை தேவாலயங்களில் எந்த பிரார்த்தனை வழிபாடுகாளும் மேற்கொள்ளக் கூடாது என தலைமை பேராயர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்பு படையினர் கொழும்பு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 5,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுடன் விமானப்படையை சேர்ந்த வீரர்கள் 1000 பேரும் கடற்படையை சேர்ந்த 600 பேரும் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, அமெரிக்காவின் எப்பிஐ, ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசார், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் சர்வதேச போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மனித வெடிகுண்டாக வந்த இன்சாப் அகமது, இல்ஹாம் அகமது சகோதரர்களின் தந்தையும், மசாலா நிறுவன தொழிலதிபருமான முகமது யூசுப் இப்ராகிமும் நேற்று கைதானதாக கூறப்படுகிறது. இவரும் தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியர்கள் பலி 11 ஆனது

குண்டுவெடிப்பில் பலியான வெளிநாட்டவர்கள் குறித்து இலங்கை வெளியுறவுத்துறை நேற்று விடுத்த அறிக்கையில், ‘பலியானவர்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த 11 பேர் பலியாகி உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த 6 பேரும், டென்மார்க்கை சேர்ந்த 3 பேரும், அமெரிக்கா, சீனா, சவுதி, துருக்கி நாடுகளைச் சேர்ந்த தலா 2 பேரும், ஜப்பான், வங்கதேசம், போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்காவை சேர்ந்த தலா ஒருவரும், இங்கிலாந்து-அமெரிக்க இரு குடியுரிமை பெற்ற 2 பேரும் பலியாகி உள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.

கைதாகி விடுதலையான தீவிரவாதி இல்ஹாம்

சினமோன் ஓட்டலில் மனித வெடிகுண்டாக சென்ற தீவிரவாதி இல்ஹாம் அகமது. தொழிலதிபர் முகமது யூசுப்பின் இளைய மகன். குண்டுவெடிப்புக்கு முன்பாகவே இவனை கொழும்பு போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்துள்ளனர். ஆனாலும், முகமது யூசுப்பின் குடும்பத்தை தொடர்ந்து கண்காணித்தும் வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டியிலும், ‘‘மனித வெடிகுண்டாக வந்த தீவிரவாதிகளில் சிலரை ஏற்கனவே நாங்கள் கண்காணித்து வந்தோம். ஆனால், அவர்களை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் பிடிக்க முடியவில்லை,’’ என கூறி உள்ளார்.

7-8 ஆண்டுகளாக திட்டமிட்டிருக்கலாம்

இலங்கை நாடாளுமன்றத்தில் அவசரநிலை பிரகடனம் மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது, 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா பேசுகையில், ‘‘இது போன்ற தற்கொலைப் படை தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகளுக்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், இந்த தாக்குதலை நடத்திய அமைப்பு, 7 அல்லது 8 ஆண்டுகளாக திட்டமிட்டு இதை செய்திருக்கக் கூடும். இந்த அமைப்பிலும் புலிகளின் தலைவர் போன்ற ஒருவர்  உருவாகி இருக்கலாம். நமது புலனாய்வு பிரிவு வலுவான நிலையில் இல்லை என்பதை நாம் ஏற்க வேண்டும். வலுவில்லாத அரசாங்கமும், அதிபர் சிறிசேனா, பிரதமர் விக்ரமசிங்கே, பாதுகாப்பு அதிகாரிகள் செய்த தவறின் விளைவுதான் இந்த தாக்குதல்’’ என்றார்.

கண்டி அருகே தீவிரவாத முகாம்

இலங்கையில் கண்டி அருகே காட்டுப் பகுதியில் தீவிரவாத முகாம் ஒன்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு, தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அங்கு சிலர் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து, இப்பகுதியில் கொழும்பு போலீசார் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு செயலர் பதவி விலகல்

உளவுத் தகவலை அலட்சியப்படுத்தியதற்காக பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ, காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் பதவி விலக அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, ஹேமசிறி நேற்று பதவி விலகினார். புஜித் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதேபோல், நாட்டின் பாதுகாப்பு கருதி 39 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த விசா  சலுகை தற்காலிகமாக நேற்று ரத்து செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: