நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது குமரியில் திடீர் கடல் சீற்றம் அலையில் சிக்கி 2 பேர் பலி

குளச்சல்: குமரி கடலோர பகுதிகளில் நேற்று மதியம் கடல் சீற்றம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.  ராட்சத அலையில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் வருகிற 29ம்  தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்பதால் கடல் சீற்றமாக  காணப்படும். எனவே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் குளச்சல் கடல் பகுதியில் திடீர் சூறைக்காற்று வீசியது. ராட்சத அலைகள்  எழுந்து மணற்பரப்பையும் தாண்டி விழுந்தது. மண்டைக்காடு புதூர் மேற்கு  பகுதியில் ராட்சத அலைகள் எழுந்து தென்னந்தோப்பு மணற்பரப்புகளை இழுத்து  சென்றது. இதனால் கடலரிப்பு ஏற்பட்டு தென்னைகள் சாய்ந்து கடலில்  விழுந்தன. மேலும்  அங்குள்ள 400  வீடுகளை கடல் நீர் சூழும் அபாயமும்  ஏற்பட்டுள்ளது. குளச்சல்  துறைமுகம் பாலம் மணற்பரப்பு முழுவதும் கடல் நீர் சூழ்ந்ததால் மாலை வேளை  கடற்கரைக்கு பொழுது போக்க சென்ற பொதுமக்கள் உட்கார முடியாமல்  தவித்தனர். குறும்பனையில்  ராட்சத அலைகள் எழுந்ததால் சகாயமாதா தெருவில் உள்ள வீடுகளை சுற்றி  கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி ஆகிய  பகுதியில் தீடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் உருவாகி கடல் நீர் அலை தடுப்பு சுவரையும் தாண்டி ஊருக்குள் புகுந்தது. சுமார் 60 வீடுகளுக்கு தண்ணீர் புகுந்தது. வள்ளவிளையில் அலை தடுப்பு சுவர் சேதமடைந்துள்ள பகுதி வழியாக கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. மார்த்தாண்டன் துறை பள்ளிவளாக குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்ததால் வீடுகளில் வைத்திருந்த உணவு பொருட்கள், துணி மணிகள் சேதம் அடைந்தன. இதேபோல், கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம், மிடாலம் ஆகிய பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அந்த வீடுகளில் உள்ளவர்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும், குமரி கடலோர பகுதிகளில் மட்டும் சுமார் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவதியடைந்தனர். தொடர்ந்து கடலரிப்பால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் பணியாட்களை  வைத்து மூட்டைகளில் மணல் நிரப்பி வலைக்குள் வைத்து  பாதுகாப்பு ஏற்பாடுகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.

அலையில் சிக்கி பெண் பலி: குமரி இனயம்புத்தன்துறையை சேர்ந்தவர் பினோபின் ராஜ். இவர் தனது திருமணத்தை முன்னிட்டு, தனது முகநூல் நண்பர்களை அழைத்துள்ளார். இவரது அழைப்பை ஏற்று   சேலத்தை சேர்ந்த  மோகன்(33),  திருப்பூரை சேர்ந்த மயில்சாமி மகள் சங்கீதா(24) உள்பட 5 பேர்  வந்துள்ளனர்.  நேற்று  இனயம்புத்தன்துறை  தேவாலயம் முன்பு உள்ள கடற்கரையில் கால்களை நனைத்து விளையாடியபோது, சங்கீதாவை அலை இழுத்து சென்றது. அவரை காப்பாற்ற மோகன் முயன்றார். எனினும் ராட்சத அலையில்  2 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனைப்பார்த்து உடனிருந்த நண்பர்கள், சங்கீதாவை மீட்டு புதுக்கடையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ேமாகனின் சடலத்தை மீனவர்கள், குளச்சல் மரைன் போலீசார் தேடுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: