தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தங்க மங்கை கோமதி

கத்தாரில் நடைப்பெற்று வரும் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவுக்கான முதல் தங்கத்தை திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து (30 வயது) வென்று சாதனை படைத்தார்.மகளிர் 800மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் முதல் சுற்றில் முதல் இடம் பிடித்த அவர், பைனலில் அபாரமாக செயல்பட்டு (2 நிமிடம், 2.70 விநாடி) தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இதற்கு முன் பாட்டியாலாவில் நடந்த பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் 800 மீட்டர் தொலைவை 2 நிமிடம், 3.21 விநாடிகளில் கடந்ததே அவரது முந்தைய சாதனையாக இருந்தது. அதை ஆசிய தொடரில் முறியடித்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் சீனாவின் வாங் சுன்யூ (2:2.96 விநாடி) வெள்ளிப் பதக்கமும், கஜகிஸ்தான்  வீராங்கனை மார்கரிட்டா முகஷ்வா (2:3.83 விநாடி) வெண்கலமும் வென்றனர்.

சர்வதேச அளவில் கோமதி வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கூறுகையில், ‘தொடக்கத்தில் வாழ்க்கை எனக்கு சவாலாகவே இருந்தது. ஆனாலும், என் திறமை மீது எந்த சந்தேகமும் இருந்ததில்லை.

தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது. இந்தப் போட்டியில் கடைசி 150 மீட்டர் வரை பின்தங்கி இருந்தேன். அதன் பிறகுதான் வேகமெடுத்தேன். வெற்றிக் கோட்டை கடந்த பிறகு சிறிது நேரம் கழித்துதான் தங்கம் வென்றதை உணர்ந்தேன்’ என்றார். திருச்சி அருகே உள்ள முடிகண்டன் என்ற சிற்றூரசை் சேர்ந்தவர் கோமதி. அப்பா மாரிமுத்து விவசாயி. அம்மா ராசாத்தி. ஒரு அண்ணன் ஒரு அக்கா. கடைக்குட்டிதான் கோமதி. திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரில் படிக்கும் போது தனது தோழி சுருதியை பார்த்து  போது ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. 20 வயதில்தான் பயிற்சியை தொடங்கினார். புனேவில் 2013ம் ஆண்டு நடைப்பெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் 800மீட்டர் ஓட்டத்தில் 7 வது இடம், 2015ல் சீனாவில் நடந்த போட்டியில் 4வது இடம் பிடித்தார்.

 அப்பா மாரிமுத்து புற்றுநோய் பாதிப்பாலும், பயிற்சியாளர் காந்தி மாரடைப்பு ஏற்பட்டும் இறந்தது கோமதியின் தடகள வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. பயிற்சியின் போது இடுப்பில் காயம் ஏற்பட்டது மேலும் பின்னடைவை கொடுத்தது. இப்படி தொடர்ந்த பிரச்னைகளால்  2 ஆண்டுகள் பயிற்சி பெறாமல்  இருந்தார். அதனால் ஆசிய விளையாட்டு போட்டி உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கியவர்  தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். இப்போது பல்வேறு தடைகளை தாண்டி ஆசிய போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.பெங்களூரில் வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் இப்பணியில் சேர்ந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: