இடிமின்னலுடன் பலத்த மழை குற்றாலம் அருவிகளில் மிதமாக விழும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி: குற்றாலத்தில் நேற்றிரவு இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மெயின்அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் விழுவதால் சுற்றுவட்டார மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.குற்றாலத்தில் கடந்த இரண்டு வாரமாக பகலில்  வெயிலும், மாலை மற்றும் இரவில் பலத்த இடியுடன் மழை தொடர்கிறது. இந்நிலையில் நேற்றும் பகலில் வெயில் நீடித்த நிலையில் இரவு 9.15 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.  இதன் காரணமாக இரவு 12 மணி முதல் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. இதுபோல் ஐந்தருவியிலும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இரவில் அருவிகளில் தண்ணீர் கலங்கலாக விழுந்த நிலையில் இன்று (ஏப்.23) காலை முதல் தண்ணீர் தெளிவடைந்து பால்போன்று வெண்மை நிறத்தில் கொட்டுகிறது.

தற்போது கோடைகாலம் என்பதால் அருவிகளில் தண்ணீர் விழும் தகவல் அறிந்து சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வர தொடங்கி யுள்ளனர். குற்றாலம் அருவியில் தண்ணீர் வர தொடங்கியுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு இல்லை. இதனால் மெயின்அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில், குளிக்கும் ஆர்வம் காரணமாக ஆண்கள் அத்துமீறும் சம்பவம் நிகழ்கிறது. இதனால் பெண்கள் முகம்சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை காரணமாக கடந்த ஒரு வாரமாக வறண்டு காணப்பட்ட நிலையில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர்வர தொடங்கியுள்ளதால் குற்றாலம் சீசன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடைகாலம் என்பதால் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: