இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன் : இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஞாயிறன்று 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர விடுதிகள், ஒரு வீடு என 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அமக் என்ற செய்தி நிறுவனம் தங்கள் அமைப்பு குண்டுவெடிப்பை நடத்தியதாக ஒப்புக் கொண்டது.

இந்நிலையில் இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார். கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதி முன் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளும் இலங்கைக்கு வழங்கப்படும் என்று உறுதி கொடுத்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த ட்ரம்ப், சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து ரணில் விக்கிரமசிங்கேவிடம் ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: