பரபரப்பை ஏற்படுத்திய பொன்னமராவதி விவகாரம்: அவதூறு பரப்பிய குகன் என்பவர் கைது... போலீசார் தீவிர விசாரணை

புதுக்கோட்டை: பரபரப்பை ஏற்படுத்திய பொன்னமராவதி விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை வாட்ஸ் ஆப் மூலமாக இழுவுபடுத்தி  பேசிய குகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னமராவதி பகுதியில் கலவரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ வைரலானது. இதனால், பொன்னமராவதியில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அவதூறு பரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பொன்னமராவதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் அந்த சமூகத்தினர் கடைகளை அடைக்கும்படி கூறி போராட்டம் நடத்தினர். இதன்பின், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் துடைப்பத்துடனும், ஆண்கள் கம்புகள் எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக பொன்னமராவதி காவல் நிலையம் முன் வந்து அவதூறு பரப்பியவர்களை கைது செய்யவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தினர்.

இதனால் காவல்நிலையத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, மக்கள் காவல் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது சரமாரி கற்களை வீசினர். இதில் 3 போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர். 7 வாகனங்கள், 2 பஸ்கள் சேதமடைந்தது. அப்போது கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் ஒரு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், தடியடி நடத்தினர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் அந்த சமூகத்தை சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர்.

144 தடை உத்தரவு:

இந்த சம்பவம் தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, திருச்சி சரக டிஐஜி லலிதாலட்சுமி ஆகியோருடன் காவல் நிலையத்தில் போராட்டக்காரர்களின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசினார். இதன்பின், செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறுகையில், ‘‘ஒரு சமூகத்தினரை இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் பதிவிட்ட விஷமிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக, பொன்னமராவதி தாலுக்காவுக்குட்பட்ட 42 ஊராட்சிகளுக்கு  உட்பட்ட 50 கிராமங்களில் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு பஸ் மற்றும் வாகன போக்குவரத்து இருக்காது. 3 நாட்களுக்கு பின் சகஜ நிலை திரும்பிய பின் போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்படும்’’ என்றார்.

144 தடை உத்தரவு வாபஸ்

இந்நிலையில் பொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள 40 ஊராட்சிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. கடந்த சனிக்கிழமை பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக  அடையாளம் தெரியாத 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .இதைத் தொடர்ந்து நேற்று வழக்கம் போல் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்கள் வழக்கம்போல் பணிகளை தொடர்ந்தனர். இதனால் நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த ஆடியோவில் உள்ள நபரை கைது செய்ய கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் உதவியையும் புதுக்கோட்டை போலீசார் நாடியுள்ளனர். இந்த சமயத்தில் சமூக வலைதளத்தில் ஒரு குறிப்பிட்ட நபரின் புகை படத்துடன், இந்த நபர் தான் முதல் ஆடியோவை பகிர்ந்தவர், ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக ஆடியோவை வெளியிட்ட நபர் இவர் தான், இதை அதிக அளவில் பகிருங்கள் என்ற பதிவானது தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. அந்த பதிவு வேகமாக பரவியதால் அந்த படத்தில் இருந்த தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ஐயாசாமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

என் படத்துடன் தவறான பதிவை பரப்பி வருகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரை அடுத்து வதந்தி பரப்பியதாக கொத்தமங்கலம் செல்வராஜ் என்பவர் மகன் குகன் மற்றும் மாரிமுத்து என்ற இரு பெயர்களை குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் குகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: