தமிழக பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளர் காலி பணியிட எண்ணிக்கை அதிகரிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள முக்கியமான பணியிடத்துக்கு பதவி உயர்வுக்கு ஒப்புதல் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில்  கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், அணை, ஏரிகள் புனரமைத்தல், புதிதாக அணைகட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள்  மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரம் கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்பணிகளை மேற்கொள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டல தலைமை பொறியாளர்  கண்காணிப்பின் கீழ் நடந்து வருகிறது. இவர்கள் முதன்மை தலைமை பொறியாளர் மேற்பார்வையின் கீழ் தான் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை தலைமை பொறியாளர் பணியிடங்கள்  கடந்த சில மாதங்களாக காலியாக உள்ளது.

Advertising
Advertising

குறிப்பாக, பொதுப்பணித்துறையில் அணைகள் பாதுகாப்பு இயக்ககம், கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர், நீர்வளத்துறை வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம், மதுரை மண்டல தலைமை  பொறியாளர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர், கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் என 6 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 30ம் தேதி தொழிற்கல்வி  இயக்கக தலைமை பொறியாளர் துரைசாமி ஓய்வு பெறுகிறார். தொடர்ந்து மே மாதத்தில் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம், மதுரை மண்டல கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் ரபீந்தர் ஓய்வு  பெறுகின்றனர். தொடர்ந்து ஜூன் மாதத்தில் 4 தலைமை பொறியாளர்கள் ஓய்வு பெறவுள்ளனர். இதனால், காலி பணியிடங்களின் எண்ணிக்கை 13 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.

பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில் தலைமை பொறியாளர்கள் இல்லாமல் பணிகள் முடங்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் 7 தலைமை பொறியாளர் பதவி உயர்வு பட்டியலுக்கு ஒப்புதல்  கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் காலியாக உள்ள தலைமை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பபடும் என்று பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: