புதுடெல்லி: பண மதிப்பு நீக்கம் தொடர்பாக புதிய வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க பழைய ₹500, ₹1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதன் பிறகு வங்கிகளில் இவற்றை பொதுமக்கள் மாற்ற அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், பலர் தங்களிடம் இருந்த செல்லாத நோட்டை சட்ட விரோதமாக மாற்றியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள காங்கிரஸ், இது தொடர்பான வீடியோக்களை, கடந்த மார்ச் 26 மற்றும் கடந்த 9ம் தேதி வெளியிட்டது. கடந்த 9ம் தேதி வெளியிட்ட வீடிேயாவில் ராகுல் ரத்தரேகர் என்பவர், சட்ட விரோதமாக பணத்தை மாற்ற உதவியது பதிவாகியிருந்தது. இதன் பிறகு கேபினட் செகரட்டேரியேட் வெளியிட்ட விளக்கத்தில், ராகுல் ரத்தரேகர் கேபினட் செகரட்டேரியேட்டில் காவலர் நிலையில் பணியாற்றியவர். பண மதிப்பிழப்புக்கு பிறகு, பழைய நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்ற உதவிய குற்றத்துக்காக 2017 ஜூன் மாதம் இவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என தெரிவித்திருந்தது.