வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் பிரதமர் மோடிக்கு கடும் சவாலாக இருப்பார் : ராபர்ட் வத்ரா

டெல்லி : பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டால் பிரதமர் மோடிக்கு கடும் சவாலாக இருப்பார் என அவரது கணவர் ராபர்ட் வத்ரா கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது வதோதரா மற்றும் வாரணாசி தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி, தற்போது வாரணாசி தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறார். கடந்த முறை வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுமார் மூன்றே முக்கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். தற்போது பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் பெயரை காங்கிரஸ் கட்சி இதுவரை ரகசியமாக வைத்துள்ளது.

இந்நிலையில் வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி களம் இறங்கினால் கடும் போட்டியை சந்திப்பார் என மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா, மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், அதனை பிரியங்கா மற்றும் ராகுலிடம் அவர்கள் காண்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மோடிக்கு எதிராக களம் இறக்கப்பட்டால் பிரியங்கா கடுமையாக உழைப்பார் என கூறிய அவர், பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டால் பிரதமர் மோடிக்கு கடும் சவாலாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக கட்சித் தலைமை உத்தரவிட்டால் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயார் என்று பிரியங்கா காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: