வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ.,யை பீர் பாட்டிலால் குத்த முயன்ற ஆசாமி கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் குற்றவியல் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர  வாகனத்தில் வந்த வாலிபர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தார். இதை பார்த்த போலீஸ் எஸ்.ஐ., பச்சமுத்து அந்த வாலிபரை பிடிக்க விரட்டி சென்றார்.அப்போது, அந்த வாலிபர் மறைத்து வைத்து இருந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து, எஸ்.ஐ.,யை குத்திவிட்டு தப்ப முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட எஸ்.ஐ., பச்சமுத்து அவரை லாவகமாக மடக்கி பிடித்தார். பிறகு  அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இதில், அரும்பாக்கத்தை சேர்ந்த சிவகுமார் (27) என்பதும், இவர் தனது சகோதரர் லிங்கம் (எ) கணேசன் (32), கூட்டாளிகள் ராஜ்குமார், முருகன், விஜி ஆகியோருடன் சேர்ந்து அண்ணாநகர் பகுதியில் தொடர் வழிபறியில்  ஈடுப்பட்டதும், மாதவரம் பகுதியில் பைக் திருட்டு, செல்போனை பறிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் மீது அண்ணாநகர், அரும்பாக்கம், சைதாப்பேட்டை காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் சிவக்குமாரிடம் இருந்து 4 சவரன் நகை மற்றும் பைக்கை  பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: