துவாரகா தொகுதி பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது : குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு

காந்திநகர் : குஜராத் மாநிலம் துவாரகா தொகுதி பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாபுபா மானக் என்பவர் வெற்றி பெற்றவர். இவரது வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் பாஜக வேட்பாளர் மானக் குறைபாடுள்ள வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும் அதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மானக்கின் வேட்பு மனுவில் தொகுதியின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மக்கள் அளித்த தீர்ப்பின்படி மானக்கை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, துவாரகா எம்எல்ஏ பபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், இந்த தீர்ப்பிற்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மானக்கின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கோரிக்கையை குஜராத் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: