ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கொலை வழக்கு முக்கிய கொலையாளிகள் குறித்து துப்பு துலங்கியது: டி.சி.பி. ரவி சென்னனவர் பேட்டி

பெங்களூரு, ஏப்.9: ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கொலை வழக்கில் முக்கிய துப்பு கிடைத்திருப்பதாக டி.சி.பி. ரவி சென்னனவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஒசகெரேஹள்ளியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ரமேஷ். சூதாட்டத்தில் அதிகளவு ஈடுபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் ஆர்.ஆர் நகர் சரகத்திற்குட்பட்ட கிருஷ்ணப்பா லே அவுட்டை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அனைவரும் ஒன்று சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர். பின்னர் கத்தியால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் குத்தி கொலை செய்த அவர்கள், தலையை இரும்பு ராடால் சிதைத்துள்ளனர்.மறுநாள் காலை ரமேஷின் சடலம் கிருஷ்ணப்பா லே அவுட் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கேட்பாரற்று கிடந்தது.

தகவல் அறிந்து சென்ற ஆர்.ஆர்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிறிது நேரம் அடையாளம் தெரியாமல் தினறினர். பின்னர் அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த முகவரியை வைத்து, அடையாளம் கண்டுபிடித்தனர். இதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வழக்கு பதிவானது. கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் போலீசாருக்கு சில துப்புகள் கிடைத்துள்ளது. இது குறித்து மேற்கு மண்டல டி.சி.பி ரவி சென்னனவர் கூறும்போது; சூதாட்டம் மற்றும் தொழில் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நண்பர்களுக்கும், ரமேஷிற்கும் முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மதுபோதையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், நண்பர்கள் ரமேஷை கொலை செய்துள்ளனர். யார், யார் கொலையாளிகள் என்பது போலீசாரால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.

போலீசார் அவர்களின் வீடுகளுக்கு தேடி சென்றபோது, அனைவரும் தலைமறைவாகியிருந்தனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: