ஆற்காடு அருகே சினிமா பாணியில் துணிகரம்; தனியார் நிதி நிறுவன ஏஜென்சி பங்குதாரரிடம் ₹12 லட்சம் கொள்ளை: 6 பேர் கும்பல் கைது; 2 பேருக்கு வலை

ஆற்காடு: ஆற்காடு அருகே சினிமா படங்களில் வருவதுபோல் ஏஜென்சி பங்குதாரரிடம் ₹12 லட்சத்தை கொள்ளையடித்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

வேலூர் ஆர்.என்.பாளையம் எஸ்.எம்.கான். தெருவை சேர்ந்தவர் நபீஸ் (28). தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்ட்டாக உள்ளார். இதில் பங்குதாரர்களாக அதே பகுதியை சேர்ந்த முகமது இத்ரிஸ், அலாவுதீன், நிஜாமுதீன் ஆகியோர் உள்ளனர். இந்த 3 பேரும் பல பகுதிகளுக்கு சென்று பணத்தை வசூல் செய்து வந்து நபீஸிடம் கொடுப்பார்களாம். அதன்படி நிஜாமுதீன் கடந்த மே 14ம்தேதி திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் பணத்தை வசூல் செய்ய பைக்கில் சென்றார். தன்னுடன் கஸ்பாவை சேர்ந்த ஆசீப் என்பவரை உதவிக்கு அழைத்து சென்றார். அங்கு பல்வேறு நபர்களிடம் ₹12,31,820ஐ வசூலித்து கொண்டு மீண்டும் பைக்கில் வேலூருக்கு திரும்பி வந்தனர். பைக்கை நிஜாமுதீன் ஓட்டினார். இரவு 7.50 மணியளவில் ஆற்காடு அடுத்த தென்நந்தியாலம் பூஞ்சோலை நகர் அருகே வந்தபோது காரில் வந்த 7 பேர் கும்பல், நிஜாமுதீன் பைக்கை வழிமறித்து பணப்பையை பறித்து கொண்டு தப்பினர்.

அதிர்ச்சியடைந்த நிஜாமுதீன், நபீசுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து நபீஸ், கடந்த 9ம்தேதி ரத்தினகிரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின்பேரில் நிஜாமுதீனுடன் சென்ற ஆசீப்பிடம் விசாரித்தனர். அதில் ஆசீப் (25) தனது நண்பர்களான ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தை சேர்ந்த அமீன் (29), அஜய் (23), ஜெய்சந்தர் என்கிற சந்துரு (33), அஸ்வின் (21), குசால் என்கிற தனுஷ் (19) ஆகியோருடன் பணத்தை கொள்ளையடித்தது தெரிந்தது.

நிஜாமுதீன் அதிக பணம் வசூல் செய்யும்போது பாதுகாப்பிற்காக தன்னுடன் ஆசீப்பை அழைத்து செல்வது வழக்கம். ஒரேநாளில் அதிக பணம் வசூலாவதை தெரிந்து கொண்ட ஆசீப், தனது நண்பர்களுடன் சேர்ந்து சினிமா படங்களில் வருவதைபோல் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த மே 14ம்தேதி இரவு ஆசீப் கொடுத்த தகவலின்பேரில் அமீன், அஜய், ஜெய்சந்தர், அஸ்வின், தனுஷ், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரதி, சந்தோஷ் ஆகியோர் பணத்தை கொள்ளையடிக்க காரில் தென்நந்தியாலம் அருகே காத்திருந்தனர். நிஜாமுதீனுடன் வந்த ஆசிப், தாங்கள் பைக்கில் எங்கு வந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவ்வப்போது மெசேஜ் மூலம் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி தென்நந்தியாலம் பூஞ்சோலை நகர் அருகே வந்தபோது, தயாராக இருந்த அந்த 6 பேரும் பைக்கை வழிமறித்து பணப்பையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் ஆசிப் கொள்ளை சம்பவத்திற்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோல் நிஜாமுதீனுடன் இருந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசீப், அமீன் அகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர், இருவரும் கொடுத்த தகவலின்பேரில் முப்பதுவெட்டி ஏரிக்கரையில் பதுங்கியிருந்த அஜய், ஜெய்சந்தர், அஸ்வின், தனுஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹1.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான பாரதி, சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் பற்றி விசாரிக்கின்றனர்.

The post ஆற்காடு அருகே சினிமா பாணியில் துணிகரம்; தனியார் நிதி நிறுவன ஏஜென்சி பங்குதாரரிடம் ₹12 லட்சம் கொள்ளை: 6 பேர் கும்பல் கைது; 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: