தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி சொத்துக்களை குவித்த கும்பல் கைது: ரூ.4.40 கோடி சொத்துகள், 98 பவுன் நகை பறிமுதல்

ராஜபாளையம்: தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி சொத்துக்களை குவித்த 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை ராஜபாளையம் அருகே, போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.40 கோடி சொத்துக்கள், 98 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தலைமறைவான முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரது பையில் ஆடைகள், முகமூடிகள் இருந்தன. இதையடுத்து போலீசார் அவரை தெற்கு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் அவர், தேனியை சேர்ந்த அருண்குமார் (23) என்பதும், பட்டதாரியான அவர், கூட்டாளியுடன் சேர்ந்து ராஜபாளையத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில், கூட்டாளியான மதுரையை சேர்ந்த வக்கீல் சுரேஷ்குமாரை (26) பிடித்து வந்து விசாரித்தனர். இதில், இருவரும் தமிழகம் முழுவதும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக மூர்த்தி என்பவர் செயல்பட்டுள்ளார். இவர், திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர். இவரது அக்கா மற்றும் உறவினர்கள் வீடு ராஜபாளையம் அருகே, முறம்பு பகுதியில் உள்ளது. அக்கா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற மூர்த்தி ராஜபாளையம் ஐஎன்டியூசி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தமிழகம் முழுவதும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறிப்பாக கண்காணிப்பு கேமரா இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார். கொள்ளையடித்த நகைகளை விற்று, தனது உறவினர்கள் மூலம் வங்கியில் டெபாசிட் செய்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜபாளையத்தில் வங்கியால் கையகப்படுத்தப்பட்டு, ஏலத்துக்கு வந்த நூற்பாலையை ரூ.4 கோடிக்கு மூர்த்தி விலைக்கு வாங்கியுள்ளார். ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே ரூ.40 லட்சத்திற்கு இடம், ரூ.12 லட்சத்திற்கு பைக் வாங்கியுள்ளார். மேலும், மதுரையில் பல கோடி மதிப்புள்ள அபார்ட்மென்ட் ஒன்றையும் விலைக்கு வாங்கியதாக தெரிகிறது.

தன்னை ஒரு பைனான்சியர் போல காட்டி கொண்ட மூர்த்தி, முறம்பில் உள்ள அவரது மைத்துனர் மோகன், மோகன் மனைவி லட்சுமி, உறவினர் மகாலட்சுமி, வக்கீல்கள் பிரியா, நாகஜோதி, மூர்த்தியின் தாய் சீனியம்மாள் ஆகியோர் மூலம் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, நேற்றிரவு முறம்பு கிராமத்துக்கு சென்ற போலீசார், மோகன், லட்சுமி, உறவினர்கள் மகாலட்சுமி, வக்கீல்கள் பிரியா, நாகஜோதி, சீனியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். மோகனின் வீட்டில் இருந்து 98 பவுன் நகை, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், ரூ.4 கோடி மதிப்பிலான நூற்பாலை மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே வாங்கிய ரூ.40 லட்சம் மதிப்பிலான இடத்தையும் போலீசார் கையகப்படுத்தினர். முக்கிய குற்றவாளியான மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி சொத்துக்களை குவித்த கும்பல் கைது: ரூ.4.40 கோடி சொத்துகள், 98 பவுன் நகை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: