போலி ஆவணங்கள் சமர்ப்பித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற 2 பீகார் வாலிபர்கள் கைது: மயிலாப்பூர் போலீஸ் நடவடிக்கை

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்ய முயன்ற 2 பீகார் வாலிபர்களை மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர். சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் நர்சிங் முடித்தவர்கள் பணிக்காக பதிவு செய்வது வழக்கம். அதன்படி நேற்று நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய பீகார் மாநிலத்தை சேர்ந்த சம்பு குமார் மற்றும் விஜேந்திர குமார் ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் கவுன்சிலில் சமர்ப்பித்த சான்றுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நர்சிங் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.

அதைதொடர்ந்து சம்பவம் குறித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அதிகாரிகள் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த போலீசார் போலி சான்றிதழை பதிவு செய்ய முயன்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த சம்பு குமார் மற்றும் விஜேந்திரகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, போலியான நர்சிங் சான்றிதழை அகில இந்திய இடஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் பணியாற்றும் வகையில் பதிவு செய்ய வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 2 பீகார் வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post போலி ஆவணங்கள் சமர்ப்பித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற 2 பீகார் வாலிபர்கள் கைது: மயிலாப்பூர் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: