தமிழகத்தில் மக்களவை தேர்தல் பாதுகாப்புக்கு 150 கம்பெனி துணை ராணுவம் வருகை : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்திற்கு விரைவில் 150 கம்பெனி ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வந்து, மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்து அதிகாரிகளுடன் 3 நாள் ஆலோசனை நடத்திவிட்டு சென்றுள்ளனர். அப்போது, தமிழகத்தில் பண நடமாட்டம் மற்றும் பண பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். இது சம்பந்தமாக, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களுடன் நேற்று மீண்டும் நான், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதன்படி, வருமான வரித்துறை அதிகாரிகள் மட்டும் இதுவரை 45.57 கோடி பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் 94.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 138 கோடி மதிப்புள்ள 521 கிலோ தங்கம், 1.73 கோடி மதிப்புள்ள வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அனுமதியில்லாமல் எடுத்துச் சென்றதாக இதுவரை 10,198 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம். கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களுக்கான முறையான ஆவணங்களை காட்டி திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

தேர்தலை முன்னிட்டு முறையான லைசென்ஸ் பெற்று வைத்திருந்த 19,655 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரி இருந்தோம். ஆனால், 160 கம்பெனி வீரர்கள் மட்டுமே தமிழகத்திற்கு வர உள்ளனர். இதில் 10 கம்பெனி வீரர்கள் ஏற்கனவே வந்து பறக்கும் படையினருடன் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மீதமுள்ள 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வருகிற 16ம் தேதிக்குள் தமிழகம் வருவார்கள். இந்த வீரர்களை எங்கெங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் (மாவட்ட கலெக்டர்கள்) உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடியும் வரை (மே 23ம் தேதி) தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும். ஆனால், ஏப்ரல் 18ம் தேதிக்கு பிறகு தேர்தல் ஆணையம் கொஞ்சம் தளர்த்த அனுமதிக்கும். அப்போது, துறை செயலாளர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.

வேலூரில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பான அறிக்கையை அவர்கள் தேர்தல் ஆணையத்திடம்தான் அளிப்பார்கள். தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இதுபற்றிய தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அங்கு கைப்பற்றப்பட்ட பணம் வருமான வரி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.  பறக்கும் படையினர் அனுமதி பெற்று எடுத்துச் செல்லும் பணம், நகைகளையும் கைப்பற்றுவதாக புகார் தெரிவிக்கிறார்கள். சரியான ரசீது, ஜிஎஸ்டி உள்ளிட்ட முறையான ஆவணங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள ஆவணங்களுடன் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. பிரசார வாகனத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தாலும் பறக்கும் படை சோதனை செய்வார்கள். அதேபோன்று தொழில் சம்பந்தமாக அனுமதி பெற்று பணம் எடுத்துச் சென்றாலும் சோதனை நடத்தப்படும். தேர்தல் ஆணையத்திடம் 50 கோடி எடுத்துச் செல்ல அனுமதி வாங்கிவிட்டு 100 கோடி எடுத்துச் செல்ல வாய்ப்புள்ளதால் இந்த சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்களை மாற்ற வேண்டும் என்ற புகார் மீது தொடர்ந்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

2 செலவின பார்வையாளர் ஏன்?

தமிழகத்தில் வழக்கமாக ஒரு தொகுதிக்கு ஒரு தேர்தல் செலவின பார்வையாளர்கள்தான்  நியமிக்கப்படுவார்கள். ஆனால் இந்த தேர்தலில் ஒரு தொகுதிக்கு 2 செலவின  பார்வையாளர்கள் நியமித்தது ஏன்? என்று தமிழக தேர்தல் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: பொதுவாக தமிழகத்தில்  வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் அதிகளவு பணம் கொடுத்து வாக்கு  சேகரிக்கிறார்கள் என்ற கருத்து உள்ளது. தற்போது கூட இந்தியாவிலேயே  தமிழகத்தில்தான் இதுவரை பணம், நகை, பரிசு பொருள் என இதுவரை  280 கோடி வரை  கைப்பற்றப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதியும் பண நடமாட்டம் அதிகம் நிறைந்த தொகுதியாக தேர்தல் ஆணையம் கருதி, 39 தொகுதியிலும்  தலா 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தபால் ஓட்டில் மாற்றம் இல்லை

வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர், சின்னம் ஒட்டும் பணி வருகிற 13ம்  தேதிக்குள் முடிவடையும். தேர்தல் பணியில் ஈடுபடும் 3.5 லட்சம் அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாளை (7ம் தேதி) நடைபெறும் 2ம் கட்ட பயிற்சி வகுப்பின்போது தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்களை பயிற்சி மையங்களில் வழங்காமல், மாவட்ட கல்வி  அதிகாரிகள் மற்றும் போலீஸ் எஸ்பிக்கள் மூலமாக வழங்க முயற்சி செய்வதாக  அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறினர். கடந்த காலங்களில் வழங்குவதுபோலவே இந்த ஆண்டும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: