காலி குடங்களுடன் பெண்கள் மறியல்; திருத்தணியில் தொடரும் போராட்டம்

திருத்தணி: திருத்தணி-சித்தூர் சாலையில் இன்று காலை குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் ஏராளமான பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி நகராட்சியில் குடிநீர் கேட்டு தொடரும் சாலை மறியலால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. திருத்தணி - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி குண்டலூர், சாய்பாபா நகர், கேகே நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இப்பகுதிகளில் இயங்கி வந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டதால், கடந்த சில வாரங்களாக இப்பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து, திருத்தணி-சித்தூர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே இன்று காலை 9 மணியளவில் காலி குடங்களுடன் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ சரவணன், நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் நீலநாராயணன், கிராம நிர்வாக அலுவலர்கள் யாசர் அராபத், கிறிஸ்டோபர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்தனர்.

அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கி, சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, சீரான குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறினர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருத்தணி நகராட்சி பகுதிகளில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: