மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை : மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். தனது இந்தூர் தொகுதிக்கு பாஜக வேட்பாளரை அறிவிக்கலாம் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தையெல்லாம் முடித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் இந்தூர் தொகுதிக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கபடாமலேயே இருந்தது. 1989 முதல் இந்தூர் தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றுள்ளார். ஒரே கட்சியிலிருந்து போட்டியிட்டு தொடர்ச்சியாக 8 முறை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற சாதனையை படைத்து லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அடுத்த வாரம் சுமித்ரா மகாஜனுக்கு 76 வயது ஆகிறது.

பாஜகவில் 75 வயதை கடந்த மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாயப்பளிக்கவில்லை. பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்டகாலம் கட்சி தலைவராக பணியாற்றியவருமான 91 வயதாகும் அத்வானிக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் இந்தூர் தொகுதிக்கும் மட்டும் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என தாமாகவே முன் வந்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், என்னுடைய நிலைப்பாட்டை நான் கட்சிக்கு தெளிவாக கூறியிருந்தேன். வயது வரம்பு கொள்கையை நடைமுறைப்படுத்த கட்சி நினைக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். இருப்பினும், என்னுடைய தொகுதியில் நான் போட்டியிட விரும்பவில்லை என கூறியும், வேறுஒரு வேட்பாளரை நிறுத்த கட்சி தயங்குகிறது. இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: