திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: ஆசியாவிலேயே புகழ்பெற்றது

திருவாரூர் நகரின் மத்தியில் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 87வது தலம் திருவாரூர் தியாகராஜர் கோயில். மூலவர் வன்மீகநாதர்.  தாயார் கமலாம்பிகை. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் என்று அனைத்துமே கொண்டு பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் எனபிரமாண்டமாக விளங்கும் பெரியகோயில் என்றழைக்கப்படுகிறது. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள் முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

பசு வடிவில் இருந்த எமதர்மராஜா மனுநீதிச்சோழனுக்கு காட்சி கொடுத்ததை விளக்கும் கல்தேர் கோயிலின் வடகிழக்கு மூலையில் உள்ளது. சிவாலயங்களில் நந்தியை நின்ற கோலத்தில் இங்கு மட்டுமே காணலாம்.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க  திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவில் நடைபெறும் ஆழித்தேரோட்டம்  ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர விழா  கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்னர் பங்குனி உத்திர தினமான கடந்த 21ம் தேதி பாத தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி 26ம் தேதி இரவு தியாகராஜர் சுவாமி தேவாசிரியர் மண்டபத்திலிருந்து தனக்கே உரிய அஜபா நடனத்துடன் ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அன்று முதல் தேரில் தியாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் துவங்குகிறது. அதன்பின்னர் காலை 7 மணி அளவில் தியாகராஜர் சுவாமி எழுந்தருளிய ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த தேரை தொடர்ந்து  கமலாம்பாள், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்படவுள்ளன. இதில் திருவாரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுப்பர். இதேபோல் இந்தாண்டும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மயிலாடுதுறை மற்றும் நன்னிலம் பகுதியிலிருந்து திருவாரூர்  வரும் பேரூந்துகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் கங்களாஞ்சேரி வெட்டாற்று பாலத்திலிருந்து மத்திய பல்கலைகழகம் மற்றும் கும்பகோணம் சாலை வழியாக விளமல் கல் பாலத்தை அடைந்து அங்கிருந்து பேரூந்து நிலையம் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு எஸ்.பி துரை தலைமையில் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுகோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தென்னரசு, உள்துறை கட்டளை பரம்பரை அறங்காவலர் ராம்விதியாகராஜன், உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், செயல் அலுவலர் கவிதா மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

300 டன் எடை கொண்ட ஆழித்தேர்

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும், 3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவார். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத  இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும். தேரோட்டத்தின் போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு  விமானம் வரை 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு சுமார் 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடிஅசைந்தாடியபடி  நகர்ந்து செல்லும் காட்சியானது கண்கொள்ளா காட்சியாகும்.  அலங்கரிக்கப்பட்ட தேருக்கு முன்பாக  4 மரக்குதிரைகள், ரிஷபம் 8, யாளம் 2, பாம்பு யாளம் 1, பிர்மா 1, துவாரபாலகர் 2, கமாய் கால் 2, மேல் கிராதி 4, கீழ் கிராதி 2, பெரிய கத்தி கேடயம் 2, பூக்குடம் 16, ராஜாராணி 2, கிழவன் கிழவி 2, சுருட்டி 4, இலை 8, பின்பக்கம் காமாய் கால் 6, அம்பராத்தோணி 2 என மொத்தம் 68  வகையான பொம்மைகள் பொருத்தப்பட்டு தேரோட்டம் நடைபெறும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: