வங்கதேசத்தில் பயங்கரம் 22 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி

தாகா: வங்கதேசத்தில் 22 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய வெளிநாட்டவர் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.  வங்கதேச தலைநகர் தாகாவில் அமைந்துள்ளது பனானி பகுதி. இங்கு 22 அடுக்குமாடிகள் கொண்ட எப்.ஆர். டவரில் நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் 8வது மாடியில் பற்றிய தீ அடுத்த சில நிமிடங்களில் மளமளவென மற்ற மாடிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 50 சதவீத தீயை அணைத்தனர். தீயின் வெப்பம் தாள முடியாமல் சிலர் மாடியில் இருந்து கீழே குதித்ததாகவும் பலர் ஜன்னல் வழியே காப்பாற்றும்படி கதறியதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தீயை அணைக்கும் பணியில் 21 தீயணைப்பு வண்டிகள் ஈடுபட்டன.

இது தவிர, விமானப்படை ஹெலிகாப்டர்கள், கடற்படை கமாண்டோக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 35 பேரை பத்திரமாக மீட்டதாகவும் மீட்புப்  பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். விபத்தில் தீக்காயம் அடைந்த இலங்கை குடிமகன் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் தாகாவில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 70 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: