பாங்காக்கில் இருந்து சென்னைக்கு உள்ளாடையில் மறைத்து கடத்திய 1.4 கிலோ தங்கம் பறிமுதல்: தாய்லாந்து பெண் கைது

சென்னை: பாங்காக்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, தாய்லாந்து பெண்ணை சுங்க அதிகாரிகள்  கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம்  நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க  அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, தாய்லாந்தை சேர்ந்த ஹைய் சோன் (32) என்ற பெண் சுற்றுலா பயணி விசாவில் சென்னை வந்திருந்தார்.  இவர், தன்னிடம் சுங்கத் தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என கூறி கிரீன் சேனல் வழியாக  வெளியில்  செல்ல முயன்றார். ஆனால் சுங்க அதிகாரிகளுக்கு  அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரது உடமைகளில் எதுவும் இல்லை.

சந்தேகம் தீராததால் பெண் சுங்க அதிகாரிகள் மூலம், தாய்லாந்து நாட்டு பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது அவரது  உள்ளாடையில் 2 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மொத்த எடை 1.4 கிலோ. சர்வதேச மதிப்பு ₹46 லட்சம்.  இதையடுத்து அதிகாரிகள்  அந்த பெண்ணை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே இவர் கடத்தி வந்த தங்க கட்டிகளை வாங்கிச் செல்வதற்காக, வெளியில் காத்திருந்த பஞ்சாப்  மாநிலத்தை சேர்ந்த லவுலின் கசப் (35) என்பவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

இவர்கள், சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், இந்த பெண் சென்னைக்கு தங்கம் கடத்தி வந்தது இதுதான் முதல்முறை என்பதும் தெரியவந்தது.  ஏற்கனவே இந்த பெண் மும்பை, கொச்சி, பெங்களூரு போன்ற இடங்களுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது. எனவே அங்கும் தங்கம் கடத்தலில் ஈடுபட்டார்களா என  பிடிபட்ட 2 பேரிடமும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: