கடன் வாங்கி தப்பியவர்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை பொய்களுக்கு விழுந்த அடி: அமைச்சர் பபுல் பேட்டி

கொல்கத்தா: ‘‘நீரவ் மோடி உள்ளிட்ட கடன் வாங்கி தப்பியவர்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையானது அரசியலில் ராகுலுக்கு விழுந்திருக்கும் பலத்த அடி’’ என மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ கூறி உள்ளார். கொல்கத்தாவில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், பொய்களின் அடிப்படையில் செய்துவரும் பிரசாரத்தால் நாடு அசாதாரண சூழலை எதிர்கொண்டிருக்கிறது. அனைத்து பொய்களும் உண்மையாகிவிடும் என்பது ராகுலின் மாயை. ஆனால், ரபேல் முதல் நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி வரை அவர் கூறிய அனைத்தும் தவிடுபொடியாகி உள்ளது. லண்டனில் நீரவ் மோடி கைது செய்யப்பட்ட விவகாரம், ராகுலின் பொய் வலைப்பின்னலை அம்பலப்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டுகிறார். ஆனால், உண்மையில் நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி, விஜய் மல்லையா போன்றவர்கள் கடன் பெற்றது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான்.

தற்போதைய ஆட்சியில் எந்த காங்கிரஸ் அமைச்சராலும், காந்தி குடும்பத்தாலும் தங்களை காப்பாற்ற முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் அவர்கள் வெளிநாடு தப்பிவிட்டனர். வெளிநாட்டில் அவர்கள் இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்ட பாஜ அரசு அனைத்து முயற்சியையும் செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கடன் பெற்று தப்பியவர்களை நாங்கள் மீண்டும் இந்தியா கொண்டு வர எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும், அரசியல் ரீதியாக ராகுலின் முகத்தில் விழுந்த அடிக்கு சமம். பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீதான விமானப்படையின் தாக்குதல் குறித்தும் சந்தேகம் கிளப்புகிறார்கள். இது குறித்து அனைத்து ஆவணத்தையும் அரசிடம் பாதுகாப்பு படை தந்துள்ளது. அதை எப்போது வெளியிட வேண்டுமென அரசுக்கு தெரியும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: