`இடாய்’ புயல் பாதித்த மொசாம்பிக்கில் 192 பேரை மீட்டது இந்திய கடற்படை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: இடாய் புயலினால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் மீட்பு நடவடிக்கையின் போது, 192 பேரை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி, ஆகியவற்றில் கடந்த 15ம் தேதி வீசிய இடாய் புயலின் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டன. இதனால் மொசாம்பிக்கில் 417, கிழக்கு ஜிம்பாப்வேயில்  250 பேர் பலியாகினர். துறைமுக நகரான பெய்ராவை கடந்த வாரம் ‘இடாய்’ புயல் தாக்கியதில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இடாய் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை   இன்னும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மொசாம்பிக் நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தியா தனது 3 கப்பல்களை அங்கு அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இடாய் புயலினால்  பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக் நாட்டின் துறைமுக நகரான பெய்ராவுக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான சுஜாதா, சாரதி, சார்துல் ஆகிய 3 கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில்  அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்படும். இதுவரை 192 பேர் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்படை அமைத்துள்ள முகாம்களில் தங்கியுள்ள 1,381 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஐஎன்எஸ் `மகர்’ நிவாரணப் பொருட்களுடன் மொசாம்பிக் நாட்டிற்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.இடாய் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவ முதல் நாடாக இந்தியாதான் முன்வந்துள்ளது. இதேபோன்று இடாய் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள ஜிம்பாப்வே, மலாவி நாடுகளுக்கும் உதவி அளிக்கப்படுகிறது  என வெளியுறவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: