ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு : பரிசல் ஓட்டிகள் கவலை

பென்னாகரம்: ஒகேனக்கல்லில், சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் பரிசல் ஓட்டிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், சிறந்த சுற்றுலா தலமாக ஒகேனக்கல் திகழ்ந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதில் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் திரளுவார்கள். இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மேலும், பள்ளிகளில் தேர்வுகள் நடந்து வருகிறது.

இதனால், ஒகேனக்கல்லுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ஓரளவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் ஓரளவிற்கு வந்த சுற்றுலா பயணிகளால் பரிசல் ஓட்டிகள், மீன் வியாபாரிகள் மற்றும் மசாஜ் செய்பவர்களுக்கு வருவாய் கிடைத்தது. ஆனால், நேற்று சொற்ப எண்ணிக்கையில் தான் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் மசாஜ் செய்தும், மெயினருவியில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், பரிசலில் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு களித்தனர். தற்போது, ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் பரிசல் ஓட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பரிசல் ஓட்டிகள் கூறுகையில், பள்ளி தேர்வு மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் வருவதால், வருவாய் குறைந்துள்ளது. இதனால், ஒரு நாளைக்கு தேவையான வருவாய் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பள்ளி தேர்வு மற்றும் தேர்தல் முடிந்த பின்பு தான் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: