அயர்லாந்துடன் டெஸ்ட் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

டேரா டூன்: அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக டெஸ்ட்  வெற்றியை பதிவு செய்து அசத்தியது. ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது. ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, 142 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய அயர்லாந்து அணி 288 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 47.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஷஷாத் 2, ரகமத் ஷா 76 ரன் (122 பந்து, 13 பவுண்டரி), முகமது நபி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இசானுல்லா 65 ரன் (129 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஹஸ்மதுல்லா ஷாகிதி 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கன் முதல் இன்னிங்சில் 98 ரன் விளாசிய  ரகமத் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 2வது போட்டியிலேயே டெஸ்ட் வெற்றியை ருசித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா முதல் போட்டியிலும், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2வது போட்டியிலும் வென்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் (6), ஜிம்பாப்வே (11), தென்  ஆப்ரிக்கா (12), இலங்கை 14 வது போட்டியில் வென்ற நிலையில்,  இந்திய அணி தனது 25வது டெஸ்டில் தான் முதல் முறையாக வென்றது. வங்கதேச அணிக்கு 35 போட்டியும், நியூசிலாந்து அணிக்கு 45 போட்டியும் தேவைப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: