முல்லை பெரியாறு விவகாரம்: நீதிபதி கே.எம்.ஜோசப் விலகலால் பரபரப்பு: மார்ச்.26க்கு வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: முல்லை பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பான வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தாமாக முன்வந்து விலகியதை அடுத்து வழக்கு வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கேரளாவை சேர்ந்த தங்கப்பன், ஆப்ரகாம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர். தமிழக அரசும் இந்த வழக்கில் மனுதாரராக இணைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதி; வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று தமிழக தரப்பில் வாதிட்டும், ஏற்காமல், தென்மண்டல தீர்ப்பாயம் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த விசாரணையில் இரு மாநில அரசின் கோரிக்கைகளையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது; இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி இரண்டு புதிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு தரப்பில் ஏற்கனவே கட்டப்பட்டு இருக்கும் கட்டிடங்களை நீக்க வேண்டும். அதேப்போல் புதிய கட்டிடங்களுக்கும் அணையின் பாதுகாப்பு கருதி உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திடீரென குறுக்கிட்ட நீதிபதி கே.எம்.ஜோசப், முல்லைப் பெரியாறு வழக்கு என்பது தமிழகம் மற்றும் கேரள ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான நீண்ட கால பிரச்னை. நான் கேரளத்தை சார்ந்த நபர் என்பதால் இந்த வழக்கில் இருந்து நான் விலகி கொள்கிறேன் என்றார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: