மாட்டுத்தீவன ஊழல் வழக்கு ஜாமீன் கோரிய லாலுவின் மனுவுக்கு 2 வாரத்தில் சிபிஐ பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: மாட்டுத்தீவன ஊழலில் தண்டனை பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவுக்கு 2 வாரத்தில் சிபிஐ பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 1990த்துக்கு முன்பு ஒன்றுபட்ட பீகார் (ஜார்கண்ட் மாநிலமும் சேர்ந்தது) மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் லாலுபிரசாத் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரான இவர், முதல்வராக இருந்தபோது தியோகர் உள்பட பல்வேறு கருவூலங்களில் மாட்டுத்தீவனம் வாங்குவதற்காக ₹900 கோடி பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு கடந்த 2017 டிசம்பர் முதல் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 தற்போது அங்குள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் மோசமான உடல்நிலையை காரணம் காட்டி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜனவரி 10ம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு லாலு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, லாலுவின் ஜாமீன் மனு தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: