அமராவதி வனத்தில் நக்சல்கள் பதுங்கல்..! : சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அமராவதி வனப்பகுதிக்குள் நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் அதிவிரைவு படை போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையான அமராவதி வனப்பகுதியில் 13-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாட்டுப்பட்டி, தளிஞ்சி என்ற கிராமங்களுக்கு அருகே மர்ம நபர்கள் 10 பேர் சென்றுள்ளனர். அதில் சிலர் கிராம மக்களிடம் பேசி உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்டு திரும்ப சென்றுள்ளனர். இந்நிலையில் தேனாறு பகுதியில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்த அவர்கள் மலை கிராமங்கள் பற்றி விசாரித்துள்ளனர். அவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி பேசினர். ஒருவர் மட்டும் தமிழில் பேசினார். அவர்களில் 4 பேர், பெரிய அளவிலான பைகளை தோளில் சுமந்தபடி சென்றனர் என கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

இதனால் பீதியடைந்த கிராம மக்கள் மர்மநபர்கள் குறித்து வனத்துறையினரிடம் தகவல் அளித்தனர். இதனையடுத்து அந்த கும்பல் நக்சலைட்டுகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர் காவல்துறை அதிகாரிகள். இதனால் தமிழக - கேரள எல்லையில் உடுமலை மற்றும் மூணாறு சாலையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இது பற்றி செய்தியாளரிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், வனவர் தலைமையில் 8 வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் மலைவாழ் மக்களைக் கொண்ட 4 குழுக்கள் சுமார் 10 கி.மீ. வரை தேடுதல் பணியில் ஈடுபட்டதாகவும், தூவானம், வரவண்டி, பாறைத்துறை வரை தேடியும் எந்த பலனும் இல்லை. கால் தடம் மண்ணில் படாமல் இருக்க, பாறைகளின் வழியாக மர்ம நபர்கள் நடந்து சென்றுள்ளனர். வனப்பகுதிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அதனால், அவர்களின் நடமாட்டத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

வனத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பழநி, திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆகிய இடங்களில் இருந்து நக்சல் தடுப்பு மற்றும் அதிவிரைவுப்படை போலீஸார் 4 குழுக்களாக, வனப்பகுதியில் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். மர்ம நபர்கள் பிடிபட்டால் தான், மற்ற விவரங்கள் தெரியவரும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: