சமாஜ்வாடி அரசு ஒத்துழைப்பு இல்லாததால் வாரணாசியை அழகுபடுத்தும் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வாரணாசி: ‘‘உ.பி.யில் முன்பு ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் தான், வாரணாசியை அழகுபடுத்தும் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டது’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தனது வாரணாசி தொகுதியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் சாலை மற்றும் புதுப்பிக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்த முதல் 3 ஆண்டுகள், உ.பி.யில் சமாஜ்வாடி அரசு ஆட்சியில் இருந்தது. இங்கு வளர்ச்சி திட்டங்கள் ேமற்கொள்ள, அந்த அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. யோகி முதல்வரான பின்பே, இங்கு வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டன. சமாஜ்வாடி அரசு முன்பே ஒத்துழைப்பு அளித்திருந்தால், இந்நேரம் வாரணாசியை அழகுபடுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு பதில் தொடங்கி வைத்திருக்கலாம். கடந்த 70 ஆண்டுகளில் எந்த அரசும், காசி விஸ்வநாதரை பற்றி நினைக்கவில்லை. அவர்கள் நலனில்தான் அக்கறை செலுத்தினர்.

அரசியலில் நான் இல்லாதபோது, நான் இங்கு பல முறை வந்துள்ளேன். இங்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

அதிகம் பேசும் நான், இங்கு வந்து பணி செய்ய வேண்டும் என அந்த சிவனே நினைத்துள்ளார். அவரின் ஆசிர்வாதத்தால் எனது கனவு நிறைவேறியுள்ளது. ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருந்த காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தற்போது விடுதலை கிடைத்துள்ளது. இதன் மூலம் 40 பழமையான கோயில்கள் மீண்டும் பொழிவு பெற்றுள்ளன. காசி விஸ்வநாதருக்காக பலர் தங்கள் சொத்துகளை கொடுத்துள்ளனர். அரசியல் சாயம் இல்லாமல், மக்களின் நம்பிக்கையை பெற்று இத்திட்டத்தை மேற்கொண்டது மிகவும் சிரமமான பணி. காசி விஸ்வநாதரை அழிக்க எதிரிகள் பலர் முயற்சித்தனர். ஆனால், மக்களின் நம்பிக்கையால், இந்த இடம் மறுபிறவி எடுத்தது.  இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில், வடக்கு மற்றும் தென் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை கான்பூரில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் மோடி தொடங்கி வைத்தார். அதேபோல், ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

பைத்தியக்காரர்கள்

உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘லக்னோவில் காஷ்மீர் வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ‘பைத்தியக்காரர்கள்’. அவர்கள் மீது உ.பி. அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், தாக்கியவர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் ஒற்றுமையை பராமரிக்க வேண்டியது மிக முக்கியம்’’ என கூறினார்

காந்தி அடைந்த வேதனை

பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘காந்தி இங்கு வந்தபோது, ‘ஏன் இந்த இடம் இப்படி உள்ளது?’என வேதனை அடைந்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலை.யில் அவர் ஆற்றிய உரையில், ‘காசி விஸ்வநாதர் கோயில் பற்றி ஆய்வு நடத்தி அதன் வரலாற்றை உலகுக்கு தெரிவிக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார். இங்குள்ள 40 பழமையான கோயில்களின் வரலாறுகளை அறிய அரசும் முயற்சிக்கிறது. பழங்கால நம்பிக்கை மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த கோயில்கள் பாதுகாக்கப்படும். இத்திட்டம் காசிக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: