எனது ஆட்சி காலத்தில் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்தியது : பாக். முன்னாள் அதிபர் முஷாரப் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: ‘‘எனது ஆட்சிக் காலத்தில் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியது’’ என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலான காலத்தில் அதிபராக பதவி வகித்தவர் பர்வேஷ் முஷாரப். இவர் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக இருந்து ஆட்சியை கைப்பற்றியவர். கடந்த 2007ல் அரசியலமைப்பு சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், நீதிபதிகளையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்  மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. அப்போது, கடந்த 2016ல் துபாயில் சிகிச்சை பெறுவதற்காக சென்றவர் நாடு திரும்பவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி அளித்த பேட்டியில், `ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். அவர் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அவருக்கு எதிரான உறுதியான ஆதாரங்களை இந்தியா வழங்க  வேண்டும்’ என்று தெரிவித்தார். அதே நேரம்,  தங்கள் நாட்டில் தீவிரவாதிகள் யாரும் இல்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்தது. ஆனால், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகள் அளித்த அழுத்தம் காரணமாக, தடை செய்ய செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 44 பேரை  பாகிஸ்தான் அரசு கடந்த செவ்வாய்கிழமை கைது செய்தது.

இது பற்றி துபாயில் முன்னாள் அதிபர் முஷாரப் அளித்த பேட்டியில், ‘‘நான் பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது உளவுத்துறை அறிவுறுத்தலின் பேரில், மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்தியாவில்  பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்புதான். அந்த அமைப்பினர் என்னை கொல்ல 2 முறை முயற்சி மேற்கொண்டனர். அந்த அமைப்பு மீது நடவடிக்கை எடுத்தால் நான் மிக மகிழ்ச்சி அடைவேன். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.‘ஏன் உங்கள் ஆட்சிக் காலத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்ற கேள்விக்கு முஷாரப் அளித்த பதிலில், ‘‘அப்போது வேறுமாதிரியான சூழ்நிலை நிலவியது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: