அயோத்தி நில பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தர்களை நியமிப்பது எப்போது? உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், மனுதாரர்களான சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லாலா அமைப்புகளும் நிலத்தை பிரித்துக் கொள்ள நீதிமன்றம் யோசனை வழங்கியது. ஆனால், தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முன்னதாக தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது.

பின்னர், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது. இதில், கடந்த விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘அயோத்தி வழக்கை பொருத்தமட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் மொத்தம் 14 ஆயிரத்து 300 பக்கங்கள் உள்ளது. ஒரு சுமூகமான தீர்வை கொண்டு வர நடுநிலையாளர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து மார்ச் 5ம் தேதி நீதிமன்றம் பரிசீலனை செய்யும்’ என கடந்த மாதம் 27ம் தேதி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர்  அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து அமைப்பின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “அயோத்தி வழக்கில் உதவ,  நடுநிலையாளர்களை நியமிக்க வேண்டும் எனபதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அயோத்தி விவகாரம் நிலப் பிரச்சனை கிடையாது. மத ரீதியான மக்களின் நம்பிக்கையை கொண்டது.  நடுநிலையாளர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில், அது பொது அறிவிப்பாக இருக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

இதற்கு இஸ்லாமிய தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “அயோத்தி வழக்கு விவகாரத்தில் கடந்த காலத்தில் யார் வந்தார்கள்? என்ன நடந்தது? அதுபற்றி நாங்கள் எதையும் கருத்தில் கொள்ள முடியாது. ஏனெனில், கடந்த கால வரலாறு எங்களுக்கு தேவையில்லை. மேலும், அயோத்தி பிரச்னையை தீர்க்க அமைக்கப்படும் நடுநிலையாளர்கள் மற்றும் அவர்களால் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை வேண்டுமானால் முழுமையாக தடுக்க முயற்சி செய்யலாம். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து விட்டது’’ என்று கூறி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: