பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பாமகவினர் கலந்து கொள்ள வேண்டும்: ஜி.கே.மணி அறிக்கை

சென்னை: பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பாமகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிமுக தலைமையில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கூட்டணியில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் சென்னை அருகே இன்று நடைபெற இருக்கிறது. சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று பிற்பகல் 4 மணியளவில் நடைபெற இருக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமரும், தேசிய அளவிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவருமான மோடி உரையாற்றுகிறார். தமிழக முதல்வர், துணை முதல்வர், பாமக நிறுவனர் ராமதாஸ்,  இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் இந்தப் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுக - பாமக - பாஜக கூட்டணிக்கு ஆதரவான மக்கள் எழுச்சியை நிரூபிக்கும் வகையிலும், மக்களவைத் தேர்தலுக்கான பயணத்தின் நல்ல தொடக்கமாகவும் இந்தப் பொதுக்கூட்டம் அமைய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விரும்புகிறார். கூட்டணியின் வலிமையையும், பாமகவின் வலிமையையும் பறைசாற்றும் வகையில் இந்தப் பொதுக்கூட்டத்தில் பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் திரண்டு வந்து பங்கேற்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு, பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பாமகவினர் வந்து சேர வேண்டும். இவ்வாறு ஜி.கே.மணி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: